மலாக்கா மாநிலத்தில் தொடங்கப்படாமல் இருந்த 55 மேம்பாட்டுத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து, புதிய ஐந்தாண்டு ஆட்சிக்கான மக்கள் ஆணையைக் கோருவதற்கு முன்பாக முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யூசோப் விளக்கமளிக்க வேண்டும் என பிகேஆர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி, மலாக்கா மாநிலத்தில் மொத்தம் 241 மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 86 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், 100 திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், 55 திட்டங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதே ஆண்டு மே 31ஆம் தேதி நிலவரப்படி, மாநில மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 8 கோடியே 80 லட்சம் ரிங்கிட்டில், 1 கோடியே 95 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் மட்டுமே செலவிடப்பட்டிருந்தது. இது மொத்த ஒதுக்கீட்டில் 22.18 விழுக்காடாகும்.
இந்நிலையில், ஏறக்குறைய 17 மாதங்கள் கடந்துள்ளதால், அந்த 55 திட்டங்களில் எத்தனை தொடங்கப்பட்டுள்ளன, எத்தனை நிறைவடைந்துள்ளன, இன்னும் எத்தனை திட்டங்கள் தாமதத்தில் உள்ளன என்பதை மாநில அரசு தற்போதைய தரவுகளுடன் வெளியிட வேண்டும் என சிவமலர் கேட்டுக்கொண்டார்.
தாமதமாகும் திட்டங்கள் பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளைப் பாதிக்கக்கூடும். எனவே, திட்டங்களின் முன்னேற்றம் குறித்த தகவல்களை மக்களிடமிருந்து மறைக்காமல் வெளிப்படையாக அறிவிப்பது அரசின் பொறுப்பாகும் என்றார்.
நிலப் பிரச்சினைகள், தொழில்நுட்ப அனுமதிகள், கொள்முதல் நடைமுறைகள், ஒப்பந்ததாரர்கள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நிதி ஒதுக்கீட்டுத் தாமதங்கள் போன்ற காரணங்களால் திட்டங்கள் பாதிக்கப்படலாம். இருப்பினும், இத்தகைய தடைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தொடங்கப்படாமல் இருந்த 55 திட்டங்களின் முழுமையான பட்டியலை மாநில அரசு வெளியிட வேண்டும். ஒவ்வொரு திட்டத்தின் அமைவிடம், ஒதுக்கப்பட்ட நிதி, பொறுப்பான அரசுத் துறை, ஆரம்பகால கால அட்டவணை, தற்போதைய செயலாக்க நிலை மற்றும் நிறைவு செய்வதற்கான இலக்கு தேதி ஆகிய விவரங்கள் அதில் இடம்பெற வேண்டும்.
அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட நிதி, இதுவரை வழங்கப்பட்ட தொகை மற்றும் செலவிடப்பட்ட தொகை குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும். இதன் மூலம் அரசின் திட்டச் செயலாக்கத்தை மக்கள் உண்மையான தரவுகளின் அடிப்படையில் மதிப்பிட முடியும்.
புதிய ஐந்தாண்டு மக்கள் ஆணையைக் கோருவதற்கு முன்பாக, கடந்த கால நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்குப் பதிலளிப்பது அவசியம். மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரங்களை அரசு முன்வைக்க வேண்டும்.
புதிய வாக்குறுதிகளை வழங்குவதற்கு முன்னர், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிறைவேற்றம் குறித்த வெளிப்படையான அறிக்கையை அப்துல் ரவூப் தலைமையிலான அரசு வெளியிட வேண்டும் என சிவமலர் கணபதி தெரிவித்தார்.
0 Comments