loader
பி.கே.ஆர். கட்சியின் முன்னாள் மாநில மகளிர் உதவித் தலைவர் மகேஸ்வரி காலமானார்

பி.கே.ஆர். கட்சியின் முன்னாள் மாநில மகளிர் உதவித் தலைவர் மகேஸ்வரி காலமானார்

பினாங்கு, அக். 23:

மறைந்த பி.கே.ஆர். கட்சித் தலைவர் அர்ஜூணனின் மனைவியும், தம்பூன் தொகுதி துணைத் தலைவர் கலைமுகிலனின் தாயாருமான மகேஸ்வரி, உடல்நலக் குறைவால் பினாங்கில் காலமானார்.

 

மறைந்த மகேஸ்வரி, 2003 முதல் 2009ஆம் ஆண்டு வரை பி.கே.ஆர். கட்சியின் மாநில மகளிர் உதவித் தலைவராகவும், தேசிய அளவில் மகளிர் உச்சமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி, கட்சியின் வளர்ச்சிக்காகத் தீவிரமாக உழைத்தவர் ஆவார்.

 

குறிப்பாக, 2004ஆம் ஆண்டு தனது தலைமையில் ஐந்து கட்சிக் கிளைகளை முழுமையாக மகளிரைக் கொண்ட கிளைகளாக உருவாக்கிய பெருமை அவரைச் சாரும். அப்போது கட்சியின் தலைவராக இருந்த டத்தின் ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், தாசேக் தாமான் ஏசானில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அந்தக் கிளைகளைத் திறந்து வைத்ததுடன், இல்ல விருந்திலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கட்சி அரசியலைத் தாண்டியும், பினாங்கு மாநிலத்தின் புக்கிட் மெர்த்தாஜாம் வட்டாரத்தில் பல்வேறு பொதுச் சேவைகளில் ஈடுபட்டு, தமது இறுதிக்காலம் வரை மக்களுக்காகப் பணியாற்றியவர் மகேஸ்வரி.

 

அவரது மறைவுக்குத் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அல்மா தாமான் பெர்மாத்தா அடுக்குமாடிக் குடியிருப்பு மக்கள் மற்றும் பி.கே.ஆர். கட்சியினர், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகக் கூறினர்.

0 Comments

leave a reply

Recent News