loader
‘தீவாளி’ அல்ல, ‘தீபாவளி’ என்ற சொல்லாடலையே நிலைநிறுத்த வேண்டும்!  இது ஒரு சொல்லைப் பற்றிய சர்ச்சையல்ல; நம் மொழியின் எதிர்காலம் பற்றிய சிந்தனை!  -எஸ்.எஸ். பாண்டியன்

‘தீவாளி’ அல்ல, ‘தீபாவளி’ என்ற சொல்லாடலையே நிலைநிறுத்த வேண்டும்! இது ஒரு சொல்லைப் பற்றிய சர்ச்சையல்ல; நம் மொழியின் எதிர்காலம் பற்றிய சிந்தனை! -எஸ்.எஸ். பாண்டியன்

மலேசியத் தமிழ்ச் சூழலில் ‘Deepavali’ அல்லது ‘தீபாவளி’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள மலேசியத் தமிழ் அமைப்புகளின் பேரவைத் தலைவர் எஸ்.எஸ். பாண்டியன், தமிழ்மொழியின் சொல்வளம், பண்பாடு மற்றும் மரபைப் பாதுகாப்பதில் அனைவரும் அக்கறை காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

‘தீபாவளி’ என்பதற்குப் பதிலாக ‘தீவாளி’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பாக எழுந்துள்ள விவாதம் வெறும் சொல்லாடல் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; அது தமிழ்மொழியின் எதிர்காலம் குறித்த சிந்தனையையும் எழுப்புகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

 

ஒரு மொழியின் சொற்கள் வெறும் ஒலிகளின் தொகுப்பல்ல. அவை அந்த மொழியின் வரலாறு, பண்பாடு, இலக்கியம் மற்றும் மக்களின் வாழ்வியல் மரபுகளைத் தாங்கி நிற்கின்றன. எனவே, ஒரு சொல்லைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதன் பொருளையும் பின்னணியையும் புரிந்துகொள்வது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மலேசியக் கல்வி அமைச்சின் 2025/2026 கல்வியாண்டுக்கான சுற்றறிக்கையிலும், உயர்கல்வி அமைச்சின் 2025ஆம் ஆண்டு ஊடக அறிக்கையிலும் ‘Deepavali’ என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார். மலேசிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வப் பயன்பாட்டிலும் தமிழ்மொழிக் கல்வி ஆவணங்களிலும் இடம்பெறும் சொற்களை ஆராய்ந்து பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

‘தீபாவளி’ என்ற சொல்லின் பயன்பாட்டைப் பாதுகாப்பது, தமிழ்மொழியின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகும். அதேவேளையில், பிற மொழிகளை மதிப்பதற்கும் அவற்றின் பயன்பாட்டைப் புரிந்துகொள்வதற்கும் இடமளிக்க வேண்டும். ஆனால், பிற மொழிகளில் பயன்படுத்தப்படும் சொற்களை அப்படியே ஏற்றுக்கொள்வதற்காகத் தமிழில் நிலைபெற்றுள்ள சொற்களைப் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் கருத்துரைத்துள்ளார்.

 

தமிழ்ப்பள்ளிகள் மொழியைக் கற்பிக்கும் இடங்களாக மட்டுமல்லாமல், தமிழின் சொல்வளம், இலக்கியம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பொறுப்பையும் கொண்டுள்ளன. எனவே, மாணவர்களிடையே தமிழ்மொழியின் மீதான பற்றையும் சரியான சொல் பயன்பாடு குறித்த விழிப்புணர்வையும் வளர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

ஒரு மொழியின் சொற்கள் புறக்கணிக்கப்படும்போது, அதன் இலக்கியமும் மரபும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படாமல் போகும் அபாயம் உள்ளது. இதனால், மொழியின் தனித்துவத்தைப் பாதுகாப்பதில் குடும்பங்கள், கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

 

“தமிழைக் காப்போம்! தமிழ்ச் சொற்களைப் பேணுவோம்! தலைமுறைகள் தோறும் தமிழ்மொழி வாழ வைப்போம்!” என மலேசியத் தமிழ் அமைப்புகளின் பேரவைத் தலைவர் எஸ்.எஸ். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments

leave a reply

Recent News