கோலாலம்பூர்:
மறைந்த இசையமைப்பாளர் தேவா, தனது குரலில் பாடும் திறமை கவிமாறனுக்கு இருப்பதாகப் பாராட்டியதுடன், சென்னைக்கு வந்தால் திரைப்படத்தில் பாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகவும் கூறியிருந்தார் எனப் பாடகர் கவிமாறன் தெரிவித்துள்ளார்.
தேவாவின் மறைவு குறித்து தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட கவிமாறன், தேவா மலேசியாவுக்கு அடிக்கடி வருகை தந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் என்றும், அவருடன் இணைந்து பல மேடைகளில் பாடும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.
ஆரம்பகாலத்தில் மைக்கல் கானா மூலம் கவிமாறனின் இசை நிகழ்ச்சிகளுக்கு தேவா அழைத்து வரப்பட்டதாகவும், கவிமாறன் ராகாவில் அறிவிப்பாளராகப் பணியாற்றிய காலத்தில் தேவா இசையமைத்த பாடல்களைத் தவறாமல் ஒலிபரப்பி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் தனது இசைத் தொகுப்பிலும் தேவா பாடியுள்ளதாகக் கூறினார்.
தேவா தம்மிடம், “நீ நல்லா வருவாய். என் குரல் உன்னிடம் இருக்கிறது. ‘சங்கராபரணம்’ போன்ற ஒரு புராணப் படத்தை நீ தயாரிக்க வேண்டும், அந்த படத்திற்கு நான் இசையமைத்துத் தருகிறேன். சென்னைக்கு வா” என்று கூறியிருந்ததை நினைவுகூர்ந்த கவிமாறன், அந்த வாய்ப்பு நிறைவேறுவதற்குள் இத்தகைய துயரச் சம்பவம் நிகழ்ந்துவிட்டதாக வேதனையுடன் தெரிவித்தார்.
தனது இசைப் பயணத்தில் தேவா அளித்த ஊக்கத்தையும் ஆதரவையும் நினைவுகூர்ந்த கவிமாறன், மறைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.
0 Comments