loader
‘தீவாளி’ அல்ல; ‘தீபாவளி’ என்ற சொல்லாடலையே நிலைநிறுத்த வேண்டும்!  பிரிக்ஃபீல்ட்ஸ் வணிக மையத்தின் தலைவாசல் பெயர்ப்பலகைக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கண்டனம்

‘தீவாளி’ அல்ல; ‘தீபாவளி’ என்ற சொல்லாடலையே நிலைநிறுத்த வேண்டும்! பிரிக்ஃபீல்ட்ஸ் வணிக மையத்தின் தலைவாசல் பெயர்ப்பலகைக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கண்டனம்

கோலாலம்பூர், அக்.17-

மலேசிய இந்தியர்கள் கொண்டாடும் முதன்மையான பண்டிகைகளில் ஒன்றாகத் தீபாவளி விளங்குகிறது. மலேசியப் பதிவேடுகளில் தீபாவளி முதன்மையான பண்டிகைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டு, அன்றைய தினம் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

 

தீபாவளி வாழ்த்துகள், தீபாவளியை முன்னிட்டுப் பிரசுரிக்கப்படும் வாழ்த்து அட்டைகள், அச்சு ஊடகங்களின் தீபாவளி வாழ்த்துச் செய்திகள் என அனைத்திலும் ‘தீபாவளி’ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், பிரிக்ஃபீல்ட்ஸ் வணிக மையத்தின் தலைவாசல் பெயர்ப்பலகையில் ‘தீவாளி’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பது தவறானது என்று சுட்டிக்காட்டிய பின்னரும், அந்தத் தவறை ஒப்புக்கொண்டு திருத்தாமல், தங்களின் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் அதனை அப்படியே விட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

 

மலேசியாவில் வாழும் இந்தியர்களில் பெரும்பான்மையான தமிழர்கள் ‘தீபாவளி’ என்றே இப்பண்டிகையை அழைக்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது, அந்தச் சொல்லை மாற்ற வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

 

மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளமாகும். தமிழர்கள் அதிகம் வாழும் பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில், அவர்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் இத்தகைய பெயர்ப்பலகை தேவையா?

 

இத்தகைய செயல் தீபாவளிக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியைக் குறைப்பதுடன், தீபாவளியின் அடையாளத்தையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

 

பல்லின மக்கள் இணைந்து வாழும் மலேசியாவில், பிற இன மக்களின் மொழி உணர்வுகளையும் அடிப்படை அடையாளங்களையும் பாதிக்கும் அல்லது புண்படுத்தும் செயல்கள், குறிப்பாக அரசாங்கத்தின் சார்பில், தவிர்க்கப்பட வேண்டும்.

 

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், ‘தீபாவளி’ என்ற சொல்லையே நிலைநிறுத்த வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்துகிறது.

 

‘தீபாவளி’ என்ற சரியான வரலாற்றுச் சொல்லை முழுமையாக நிலைநிறுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நாட்டின் நல்லிணக்கத்தையும் தமிழர்களின் மொழி உணர்வையும் பாதுகாக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, பெயர்ப்பலகையில் உள்ள பிழையைத் திருத்தி, ‘தீபாவளி’ என்ற சரியான சொல்லைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 

சாந்தா காளியப்பன்

செயலாளர்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

0 Comments

leave a reply

Recent News