loader
பாசிர் கூடாங் மருத்துவமனையில் 1,192 பணியிடங்கள் காலி; முழுத் திறனில் செயல்பட மனிதவளத்தை உடனடியாக நிரப்ப வேண்டும்!  – ஓன் ஹபிஸ்

பாசிர் கூடாங் மருத்துவமனையில் 1,192 பணியிடங்கள் காலி; முழுத் திறனில் செயல்பட மனிதவளத்தை உடனடியாக நிரப்ப வேண்டும்! – ஓன் ஹபிஸ்

 

பாசிர் கூடாங், ஆக. 5 – 
ஜொகூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாசிர் கூடாங் மருத்துவமனை நவீன மருத்துவ வசதிகள், அதிக நோயாளிகளை கையாளும் கொள்ளளவு மற்றும் பல்வேறு சிறப்பு மருத்துவப் பிரிவுகளுடன் உருவாக்கப்பட்டிருந்தாலும், கடுமையான பணியாளர் பற்றாக்குறை காரணமாக இன்னும் முழுத் திறனில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி தெரிவித்ததாவது, மருத்துவமனைக்கு மொத்தமாக 2,271 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 1,079 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இதனால், மேலும் 1,192 பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளன என்றார்.

குறிப்பாக மருத்துவ நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்கான பணியிடங்களே அதிகளவில் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜொகூர் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, முழுமையாகப் பயன்பாட்டுக்கு வர வேண்டுமெனில் மனிதவளப் பற்றாக்குறையை உடனடியாக சரிசெய்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

நவீன உபகரணங்கள் மற்றும் உயர்தர மருத்துவ வசதிகள் இருந்தபோதிலும், போதிய பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனை தனது முழு சேவைத் திறனை வெளிப்படுத்த முடியாமல் இருப்பதாகவும், இந்த நிலை நோயாளிகளுக்கான சேவையையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்கு சுகாதார அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் பாசிர் கூடாங் மருத்துவமனை அதன் முழுத் திறனுடன் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்றும் ஓன் ஹபிஸ் வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News