loader
கெர்லிங் தமிழ்ப்பள்ளி ஆசிரியையின் உயிரிழப்பு: பணியிட மிரட்டல் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்!  –மஇகா பிரிகேட் வலியுறுத்தல்

கெர்லிங் தமிழ்ப்பள்ளி ஆசிரியையின் உயிரிழப்பு: பணியிட மிரட்டல் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்! –மஇகா பிரிகேட் வலியுறுத்தல்

 

கோலாலம்பூர், ஆக. 5- உலு சிலாங்கூரில் உள்ள கெர்லிங் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் சுதா உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக மஇகா பிரிகேட் தேசியத் தலைவர் ஆண்ட்ரூ டேவிட் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பணியிடத்தில் மிரட்டல், கொடுமைப்படுத்தல், அளவுக்கு மீறிய பணிச்சுமை, பாகுபாடு அல்லது தவறான அணுகுமுறை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தால், அவற்றை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளையில், முழுமையான விசாரணை நிறைவடையும் முன்பு எந்தவொரு தனிநபர் மீதும் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதையோ, ஊகங்களின் அடிப்படையில் கருத்து தெரிவிப்பதையோ அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றார்.

காவல்துறையின் தகவலின்படி, ஆசிரியர் பள்ளியின் ஆசிரியர் அறையில் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் கோலா குபு பாரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

 சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் மனநலம், உணர்வுப்பூர்வ அழுத்தம் மற்றும் பணியிடக் கொடுமை போன்ற பிரச்சினைகள் குறித்து உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுவதாக ஆண்ட்ரூ டேவிட் குறிப்பிட்டார்.

எனவே, இந்தச் சம்பவத்தின் உண்மையான பின்னணியை வெளிக்கொணரும் வகையில், மலேசிய அரச காவல்துறை, கல்வி அமைச்சு மற்றும் சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை ஆகியவை முழுமையான, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று மஇகா பிரிகேட் வலியுறுத்தியுள்ளது.

உயிரிழப்பு ஏற்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கும் நிலை தொடரக்கூடாது. ஒவ்வொரு புகாரும் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும்; மனஅழுத்தத்தின் ஒவ்வொரு அறிகுறியும் உரிய முறையில் கையாளப்பட வேண்டும்; பாதிக்கப்படுபவர்கள் நிலைமை மோசமடைவதற்கு முன்பே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கு துக்ககாலத்திலும் விசாரணை நடைபெறும் காலத்திலும் தேவையான தனியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் மஇகா பிரிகேட் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், உண்மையை வெளிக்கொணரும் நேர்மையான விசாரணைக்காக மஇகா பிரிகேட் உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்துடன் உறுதுணையாக நிற்கும் என்றும், விசாரணையில் ஏதேனும் தவறுகள் அல்லது பொறுப்பின்மை உறுதி செய்யப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆண்ட்ரூ டேவிட் வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News