செலாயாங், ஆக. 2- நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணியின் இந்திய வேட்பாளர்களின் வெற்றிக்காக மஇகா தொண்டர்கள் முழுமனதுடன் பாடுபட்ட போதிலும், அதே அர்ப்பணிப்பு மற்ற தரப்பினரிடமிருந்து கிடைக்கவில்லை என்ற வேதனையை மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா வெளிப்படுத்தினார்.
செலயாங் மஇகா தொகுதியின் மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், "மற்றவர்களின் வெற்றிக்காக நாம் ஓடி ஓடி உழைத்தோம். ஆனால் நமது வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் மற்றவர்கள் செயல்படவில்லை. அதுதான் நெகிரி மாநிலத்தில் ஏற்பட்ட தோல்விக்கான மிகப்பெரிய வருத்தம்," என்று தெரிவித்தார்.
நெகிரி மாநிலத்தில் இந்திய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய தேசிய முன்னணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் மஇகா உறுப்பினர்கள் கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் அந்த அர்ப்பணிப்புக்கு இணையான ஒத்துழைப்பு கூட்டணியின் மற்ற தரப்புகளிடமிருந்து கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணியிலுள்ள கட்சிகள் நமக்கு ஆதரவு அளித்ததுபோல் நெகிரி தேர்தலில் அந்த ஆதரவை வழங்கவில்லை. கூட்டணியை பிரதிநிதித்து நின்ற மற்ற வேட்பாளர்களுக்கு கூட்டணியிலுள்ள கட்சிகள் மஇகாவின் வேட்பாளர்களுக்கு அந்த அளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் சொன்னார்.
மேலும், தேர்தல் காலங்களில் பிறரின் வெற்றிக்காக மட்டும் உழைப்பதை விட, நமது சொந்த வேட்பாளர்களின் வெற்றியையே முதன்மையாகக் கருதி திட்டமிட்டு செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இரண்டு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிகளைப் பெறக்கூடிய வாய்ப்பை மஇகா இழந்துள்ளதாகவும், அது இந்திய சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், தேர்தலின் போது பிற இன வாக்காளர்களில் பலர் வாக்களிக்க வராததும் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
"தேசிய முன்னணி நெகிரி மாநிலத்தில் ஆட்சியை அமைத்திருந்தாலும், அதில் நமது சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாதது வருத்தமளிக்கிறது. இது எதிர்காலத்தில் திருத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயமாகும்," என்றார்.
எதிர்காலத்தில் சிலாங்கூர் மாநிலத் தேர்தல் நடைபெறும்போது, கடந்த அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, தேவையான அரசியல் நுணுக்கங்களையும் வியூகங்களையும் வகுத்து, மஇகா வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில் மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த செலயாங் முன்னாள் மஇகா தொகுதி தலைவர் எம்.பி. ராஜாவுக்கு டத்தோ முருகையா தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.
விழாவில் சிறப்பு பிரமுகர்கள், தொகுதியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மஇகாவின் வரலாறும் அதன் சேவைகளும் நினைவுகூரப்பட்டன.
0 Comments