ஷா ஆலாம், ஜூலை 29-
கிள்ளான் ராக்கெட் கிளப் (கேஆர்சி) துணைத் தலைவர் திரு.உமாகாந்தன், செயலாளர் திரு.தேன்மாறன், பொருளாளர் திரு.சரவணன், துணைப் பொருளாளர் திரு.திருநாவுக்கரசு, பொது உறவு அதிகாரி திரு.மகேந்திர குமார், திரு.செல்வராஜு (தளவாடங்கள் பிரிவு), திரு.முனுசாமி (விளம்பர பிரிவு) ஆகிய செயலவை உறுப்பினர்கள் அனைவரும் இந்த கிண்ண பூப்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். இன்று 2ஆவது நாளாகும். இது 2 நாள் நடத்தப்பட்ட போட்டியாகும் என்று அந்த கிளப்பின் தலைவர் திரு.செண்பகமாறன் சுப்ரமணியம் தெரிவித்தார்.
இதை 3ஆவது ஆண்டாக நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். எனினும், இந்த முறை இப்போட்டிக்கு மகத்தான ஆதரவளித்து இதில் 400 பேர் பங்கேற்றனர். நாடு முழுவதிலுமுள்ள அதாவது பெர்லிஸ் தொடங்கி ஜோகூர் வரை தீபகற்ப மலேசியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்ட.னர்.
உண்மையில் இந்த முறை நடைபெற்ற போட்டியில் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுவது கடந்த முறை நடத்தப்பட்ட போட்டியில் 1 வெளிநாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இப்போட்டியில் இந்தியர்களாக இருந்தால் அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இம்முறை இந்தோனேசியா, இலங்கையைச் சேர்ந்த இந்தியர்களும் கலந்து கொண்டதை நினைத்து நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். இது அனைத்துலக இந்திய பூப்பந்து கிண்ண போட்டியாகவும் ஆகி விட்டது. அதனால் இனி வரும் காலங்களில் இப்போட்டியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.
இந்த முறை நடைபெற்ற போட்டியில் 15 பிரிவுகளை நாங்கள் வைத்திருந்தோம். அவற்றில் 8 பிரிவுகள் 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறார்களுக்கான பிரிவுகளாகும். இதர 7 பிரிவுகளும் பெரியவர்கள் ஆண்-பெண் இருபாலருக்கும் கொடுக்கப்பட்டன. இதில் பகுதிநேர தொழில்முறை விளையாட்டாளர்களுக்கும் நாங்கள் வாய்ப்புகளை வழங்கினோம். இதன் மூலம் சிறார்கள், ஆண்கள், பெண்கள், கலப்பு இரட்டையர் என அனைத்துப் பிரிவினரையும் நாங்கள் உள்ளடக்கி விட்டோம். இதில் நாங்கள் பெருமையடைகிறோம்.
அதே சமயத்தில் மாண்புமிகு சுரேஷ் சிங், எம்பிஐ காப்பரேஷன் நிறுவனமும் கடந்த 2 ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். இவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். அதைத் தவிர நமது அரசு சார்ந்த நிறுவனத்தின் நிர்வாக ஆலோசகரும் இச்சங்கத்தின் துணைப் பொருளாளருமான திரு.திருநாவுக்கரசு அவர்கள் உட்பட இதர ஆதரவாளர்களும் இருக்கின்றனர். எங்களின் தேவைகளுக்கு அவர்கள் அனைவரும் பங்களிப்பு செய்தனர்.
இப்போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றதற்கு ஆதரவாளர்கள் மட்டுமின்றிச் செயலவை உறுப்பினர்களின் அயராத உழைப்பும் முக்கிய காரணமாக இருக்கின்றன. போட்டியாளர்களும் மிகுந்த ஊக்கத்துடன் வந்திருந்தனர். இதுபோன்ற போட்டிகளை நிறைய இடங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு உள்ளது.
இப்போட்டி நடத்தப்படுவதன் நோக்கம் வெற்றியாளர்களை அடையாளம் காண்பதற்கு அல்ல, மாறாக மற்றவர்களைப் பார்த்து இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும் உற்சாகத்தைப் பார்ப்பவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி இந்த போட்டியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அனைத்து ஏற்பாட்டாளர்களையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இதற்கு வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் சிறார் தொடங்கி பெரியவர்கள் வரை ஒட்டுமொத்தமாக 400 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் மிகக் குறைந்த வயதுடைய போட்டியாளராக 6 வயதுடைய சிறுவன் கிருஷ்ண கவினேஷ் கணேசன் கலந்து கொண்டு 10 வயது பிரிவில் விளையாடினார். பெண்களுக்கான பிரிவில் இரட்டையர் பங்கேற்கும் போட்டிகள் நடைபெற்றன. கலப்பு இரட்டையர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன.
பெண்களில் 35 வயதிற்கும் மேற்பட்டோர் விளையாடினார்கள். பெரியவர்களுக்கான பிரிவில் பகுதிநேர தொழில்முறை விளையாட்டாளர்கள், இளநிலை மூத்த விளையாட்டாளர்கள், முதுநிலை மூத்த விளையாட்டாளர்கள் விளையாடினார்கள். கடந்த 2 ஆண்டுகளில் பங்கேற்ற 300 பேரை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இவ்வாண்டு 400 பேர் பங்கேற்றனர். இது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இதில் முதலாவதாக வெற்றி பெற்ற அனைவருக்கும் யோனெக்ஸ் ராக்கெட்கள், ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. 2ஆவதாக வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், யோனெக்ஸ் ராக்கெட்கள் வழங்கப்பட்டன. 3ஆவதாக வெற்றி பெற்றவர்களுக்கு பூப்பந்து சம்பந்தப்பட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
0 Comments