நெகிரி செம்பிலான், ஜூலை 25 –
நெகிரி செம்பிலானில் தேசிய முன்னணி ஆட்சியை அமைத்தால், வெற்றி பெறும் இரு இந்திய சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மாநில ஆட்சிக்குழு (எக்ஸ்கோ) உறுப்பினர் பதவி வழங்கப்படும் என தேசிய முன்னணித் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி உறுதியளித்தார்.
நெகிரி செம்பிலானில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் இந்திய சமூக ஒற்றுமை சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்திய சமூகத்தின் பங்களிப்பை தேசிய முன்னணி ஒருபோதும் புறக்கணிக்காது என்றும், மாநிலத்தின் வளர்ச்சியில் இந்தியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலானில் இந்தியர்கள் மொத்த வாக்காளர்களில் 15.4 விழுக்காட்டினராக உள்ளனர். இந்த வாக்கு வலிமையை இந்திய சமூகம் நல்ல நிர்வாகத்தை உருவாக்க பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், மாநிலத்தில் 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், அந்த வேலைகளில் பணிபுரிபவர்களுக்கு தற்போதைய நிலையை விட கூடுதல் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜாஹிட் அறிவித்தார்.
மேலும், இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக சீனாவில் Tvet தொழிற்கல்வி பயில 20,000 கல்வி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 20 விழுக்காடு அதாகவது 1,200 இடங்கள் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இது இந்திய இளைஞர்களுக்கு உலகத் தரமான கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியாகும் என்றார்.
இதற்கு முன்னர் இந்த வாய்ப்பு 500 இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் கூடுதல் மாணவர்களின் தேவைகளை கருதி கூடுதலாக 1,000 இந்திய மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேசிய முன்னணி கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து பங்காளிக் கட்சிகளும் சமமான மரியாதையுடன் நடத்தப்படுவதாக குறிப்பிட்ட ஜாஹிட், தனது தலைமையில் எந்தக் கட்சியும் புறக்கணிக்கப்படாது என உறுதியளித்தார்.
"கடந்த காலங்களில் நமக்குள் கருத்து வேறுபாடுகளும் பிரச்சினைகளும் இருந்திருக்கலாம். ஆனால் அவற்றை எல்லாம் மறந்து, ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்த முடியும்," என்று அவர் வலியுறுத்தினார்.
இந்திய சமூகத்தின் ஆதரவைப் பெறும் நோக்கில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்குமாறும், நெகிரி செம்பிலானின் வளர்ச்சிக்கும் இந்திய சமூக முன்னேற்றத்திற்கும் தேசிய முன்னணிக்கு வெற்றியை உறுதி செய்யுமாறும் ஜாஹிட் அமிடி அழைப்பு விடுத்தார்.
0 Comments