loader
மலேசியர்களின் உரிமைகளை உறுதி காக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ள மஇகா தலைவர் டான் ஸ்ரீ  விக்னேஸ்வரனின் கருத்தை வரவேற்கிறேன் -டாக்டர் சத்ய பிரகாஷ்

மலேசியர்களின் உரிமைகளை உறுதி காக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ள மஇகா தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரனின் கருத்தை வரவேற்கிறேன் -டாக்டர் சத்ய பிரகாஷ்

ஜெம்போல், ஜூலை 25 –

அரசியல் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, கொள்கை உறுதி, மிதவாத அணுகுமுறை மற்றும் தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கும் துணிச்சலை அனைத்து அரசியல் தலைவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிலாங்கூர் பிகேஆர் தேர்தல் பிரிவு இயக்குநர் டாக்டர் சத்தியா பிரகாஷ் நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து மலேசியர்களின் உரிமைகளை உறுதி காக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ள மஇகா தலைவர் டான் ஸ்ரீ  விக்னேஸ்வரனின் கருத்தை அவர் வரவேற்றார்.

பாஸ் கட்சித் தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சை விக்னேஸ்வரன் கண்டித்திருப்பது, இனவாத அரசியலை நிராகரித்து, நாட்டில் நல்லிணக்கத்தை விரும்பும் பெரும்பான்மை மலேசியர்களின் உணர்வை பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

மேலும், பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமது சனுசி முகமட் நோர், மலேசிய சீன மற்றும் இந்திய சமூகங்களின் நாட்டுப்பற்றை கேள்விக்குள்ளாக்கும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது மிகவும் பொறுப்பற்ற செயலாகும் என்றும், அது தேசிய ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியரும் சீனரும் இந்நாட்டில் "வந்தேறிகள்" அல்ல என்றும், மலேசியாவில் பிறந்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களித்து, மாமன்னருக்கும் நாட்டிற்கும் முழுமையான விசுவாசத்துடன் வாழும் உண்மையான மலேசியர்கள் என்றும் டாக்டர் சத்தியா பிரகாஷ் வலியுறுத்தினார்.

அரசியல் கட்சி வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் கொள்கை நிலைப்பாட்டை மதிப்பிடக் கூடாது என்றும், தற்போதைய அரசியல் சூழலில் எளிதல்லாத நிலையிலும் தாம் நம்பும் கொள்கையை வெளிப்படையாக முன்வைத்த விக்னேஸ்வரனின் துணிச்சலை பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

"அவர் மஇகாவைச் சேர்ந்தவர்; நான் பிகேஆரைச் சேர்ந்தவன். ஆனால் சரியான விஷயத்தை யார் சொன்னாலும் அதை பாராட்ட வேண்டும். கொள்கையைப் பாதுகாக்கும் துணிச்சல், மிதவாதம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மலேசிய உணர்வை மதிக்க வேண்டும்," என்றார்.

மலேசியா பல இன மக்களின் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாடு என்றும், மலேசிய குடியுரிமை கொண்ட ஒவ்வொருவரும் இந்த நாட்டின் அங்கம்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் நலன் மற்றும் மக்களின் ஒற்றுமை தொடர்பான விடயங்களில், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தங்களது கொள்கை நிலைப்பாட்டை தைரியமாக வெளிப்படுத்தும் தலைவர்கள் அதிகரிக்க வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"இந்தக் கருத்து யாரையும் புகழ்வதற்கோ அல்லது எந்தக் கட்சிக்கும் ஆதரவாகப் பேசுவதற்கோ அல்ல. மலேசிய மக்கள் முதிர்ச்சியான அரசியலையே விரும்புகிறார்கள் என்ற நம்பிக்கையால்தான் இதை கூறுகிறேன்," என்று டாக்டர் சத்தியா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News