loader
பாஸ்–தேசிய முன்னணி கூட்டணி: கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த இரு கட்சிகள் இன்று அதிகாரத்திற்காக இணைகின்றன! -டாக்டர் சத்திய பிரகாஷ்

பாஸ்–தேசிய முன்னணி கூட்டணி: கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த இரு கட்சிகள் இன்று அதிகாரத்திற்காக இணைகின்றன! -டாக்டர் சத்திய பிரகாஷ்

சிரம்பான், ஜூலை 22 –
பாஸ் மற்றும் தேசிய முன்னணி இடையே தற்போது உருவாகியுள்ள புதிய அரசியல் கூட்டணியை மட்டும் வைத்து அல்லாமல், அவற்றின் நிர்வாகப் பதிவு, அரசியல் கொள்கைகள் மற்றும் கூட்டணியின் அடிப்படை நோக்கங்களை ஆராய்ந்து நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் முடிவெடுக்க வேண்டும் என்று சிலாங்கூர் கெஅடிலான் தேர்தல் பிரிவு இயக்குநர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் பாஸ் மற்றும் தேசிய முன்னணி இணைந்து செயல்பட்ட காலகட்டத்தை மக்கள் இன்னும் நினைவில் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அக்காலத்தில் அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைவு உள்ளிட்ட பல்வேறு சவால்கள் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

"அரசியல் கூட்டணி என்பது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஏற்பாடு மட்டுமல்ல. அது நாட்டின் எதிர்கால திசை, நிர்வாகத்தின் நிலைத்தன்மை மற்றும் கூட்டணியின் கொள்கைகள் மீது மக்களுக்கு ஏற்படும் நம்பிக்கையையும் தீர்மானிக்கிறது. இந்தக் கூட்டணி உண்மையில் மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதா அல்லது அரசியல் அதிகாரத்தைப் பெறும் நோக்கத்திற்காக மட்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது," என்றார்.

உலு சிலாங்கூர் கெஅடிலான் கிளைத் தலைவருமான அவர், முன்பு வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த கட்சிகள் தற்போது ஒன்றிணைந்திருப்பது குறித்து மக்கள் கேள்வி எழுப்புவது இயல்பானது என்றார்.

"முன்னர் பெரும் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகள் இன்று அதிகாரத்திற்காக இணைகின்றன என்றால், அவர்களின் கொள்கைகள் மாறிவிட்டதா அல்லது அரசியல் தேவைக்கேற்ப மாற்றப்பட்டதா என்பதை மக்கள் அறிய உரிமையுடையவர்கள். இந்த மாற்றத்தின் அடிப்படை என்ன என்பதையும், மக்களின் நலனே முன்னுரிமை பெறும் என்பதற்கான உத்தரவாதம் என்ன என்பதையும் அவர்கள் விளக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.

முதிர்ச்சியான அரசியல் என்பது கூட்டணி அமைப்பதைத் தடுக்காது என்றாலும், அது தெளிவான கொள்கை, மக்களிடம் நேர்மை மற்றும் நல்லாட்சிக்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் டாக்டர் சத்திய பிரகாஷ் வலியுறுத்தினார்.

"அதிகாரம் கிடைக்கும் போது கொள்கைகளை கைவிடக் கூடாது; அரசியல் லாபத்திற்காக மட்டுமே கொள்கைகளை பயன்படுத்தவும் கூடாது. ஏனெனில், அரசியல்வாதிகளின் வார்த்தைகளை மக்கள் மறந்தாலும், அவர்களின் செயல்பாடுகளையும் ஆட்சிப் பதிவையும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்," என்று அவர் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News