கோலாலம்பூர், ஜூலை 21 – மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 137 தொகுதிகளில் ஒரே நேரத்தில் மாபெரும் ஓட்டப்பந்தயம் நடத்தப்படவுள்ளதாக மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா தெரிவித்தார்.
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தையொட்டி மொத்தம் ஏழு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. அவற்றில் கூட்டு பிரார்த்தனை, குடும்ப விழா, விளையாட்டுப் போட்டி மற்றும் மருத்துவ முகாம் ஆகிய நான்கு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.
அடுத்த நிகழ்வாக, வரும் 26ஆம் தேதி காலை 7.00 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 137 மஇகா தொகுதிகளிலும் ஓட்டப்பந்தயம் ஒரே நேரத்தில் நடைபெறும். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 1,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தேசிய அளவிலான தொடக்க நிகழ்ச்சி கோலாலம்பூர் தாமான் தித்திவங்சாவில் நடைபெறவுள்ளது. இதில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஓட்டப்பந்தயத்தை கொடியசைத்து தொடக்கி வைப்பார்.
மக்களிடையே உடல்நல விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த ஓட்டப்பந்தயம் நடத்தப்படுவதாக டத்தோ முருகையா தெரிவித்தார். குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் உடற்பயிற்சியில் போதிய ஈடுபாடு காட்டுவதில்லை என்பதால், அவர்களை உடற்பயிற்சியில் ஈடுபடுத்தும் முயற்சியாக இந்நிகழ்ச்சி அமையும் என்றார்.
இந்த தேசிய அளவிலான ஓட்டப்பந்தயத்தின் ஒருங்கிணைப்பாளராக டத்தோ எஸ்.எம். முத்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments