சிரம்பான் ஜெயா, ஜூலை 20 – சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக எண் 1-இல் போட்டியிடும் ஆர். தினாளன், இன்னும் இரண்டு நாட்களுக்குள் தனது தேர்தல் பிரச்சார அறிக்கையை வெளியிடவுள்ளதாக தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் இடம்பெறும் என்றும், சிரம்பான் ஜெயா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலான வாக்குறுதிகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தாம் அரசியலுக்கு புதிதானவர் அல்ல என்றும், தனது தந்தை ராஜகோபாலின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நீண்ட காலமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தினாளன் குறிப்பிட்டார்.
சிரம்பான் ஜெயா மக்களை சந்தித்தபோது, விளையாட்டுத் திடல்கள் இல்லாதது, தெருவிளக்குகள் போதுமான அளவில் இல்லாதது, கல்வி வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியது உள்ளிட்ட பல்வேறு குறைகளை மக்கள் முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, மேற்கல்வி தொடர விரும்பும் இளைஞர்களுக்கு அதிகமான கல்வி வாய்ப்புகளையும் தேவையான ஆதரவுகளையும் ஏற்படுத்துவதற்கு தேசிய முன்னணியுடன் இணைந்து மஇகா பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்தார்.
வரவிருக்கும் தேர்தலில் சிரம்பான் ஜெயாவில் நீல அலை எழுச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறிய ஆர். தினாளன், தொகுதி மக்களிடம் தேசிய முன்னணிக்கு ஆதரவு அளித்து எண் 1-க்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
0 Comments