loader
பக்காத்தான் ஹராப்பானில் தலைமைத்துவம் மாற்றம் வராத வரை கூட்டணியுடன் பேச்சுவார்த்தை இல்லை!

பக்காத்தான் ஹராப்பானில் தலைமைத்துவம் மாற்றம் வராத வரை கூட்டணியுடன் பேச்சுவார்த்தை இல்லை!

கோலாலம்பூர்,ஜூன் 20-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் தலைமைத்துவ மாற்றம் ஏற்படாத வரை அந்த கூட்டணியுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப் போவதில்லை என மலேசிய முன்னேற்ற கட்சியின் தலைவர் பி. வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், தற்போது பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் தலைமைகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடத்த தயாராக இருப்பதாக கூறினார்.

எனினும், பெரிக்காத்தான் நேஷனலில் சில உள்பிரச்சினைகள் நிலவுவதால், இரண்டு மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் தங்களது இயக்கம் கவனம் செலுத்தவில்லை என்றும், தங்களது முக்கிய இலக்கு அடுத்த பொதுத் தேர்தலே என்றும் கூறினார்.

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்தியர்களை தேசிய பொருளாதாரத்தின் பிரதான நீரோட்டத்தில் இணைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தினார். “மருத்துவ சேவை மட்டுமே அனைவருக்கும் சமமாக கிடைக்கிறது. அதற்கு அப்பாற்பட்ட பல துறைகளில் இந்திய சமுதாயம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளையும் வாய்ப்புகளையும் வழங்குவோம் என அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அவற்றை உறுதியாகக் கேட்டு பெறக்கூடிய தலைமைத்துவம் தற்போது இல்லை,” என்றார்.

மேலும், அனைத்து இந்திய அடிப்படையிலான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்திய சமுதாயத்தின் குரலாக செயல்பட வேண்டும் என தாம் முன்மொழிந்ததாகவும், மூத்த இந்திய அரசியல் கட்சியான மஇகா இதற்கு தலைமை தாங்க வேண்டும் என்று ஆர்எம்13 பட்ஜெட் தொடர்பான விவாதங்களின் போது அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் இதுவரை அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும், எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறினார்.

“பொய்களை நம்பிக்கொண்டிருக்கும் வரை நமது சமுதாயம் தொடர்ந்து ஏமாற்றமடைந்து கொண்டே இருக்கும். மாயையான அரசியல் வாக்குறுதிகளிலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும்.

இந்தியர்களின் உரிமைகளை வலியுறுத்திக் கேட்க எந்த அரசியல் கட்சிக்கும் துணிச்சல் இல்லை. இந்திய சமுதாயம் அடிமை மனப்பான்மை கொண்ட தலைவர்களை வைத்திருக்கும் வரை, சமூகமும் அடிமைகளாகவே பார்க்கப்படும்,” என்றும் வேதமூர்த்தி கடுமையாக விமர்சித்தார்.

0 Comments

leave a reply

Recent News