கோலாலம்பூர், ஜூன் 19-
மலேசியாவின் திறமையான பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கில், சினிஃபெஸ்ட் மலேசியா (Cinefest Malaysia) “தி கிராண்ட் ஸ்டேஜ்: தி அல்டிமேட் சிங்கிங் & டான்ஸ் பேட்டில்” என்ற புதிய நாடளாவிய திறமையாளர் போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மொத்தம் வெ.120,000 பரிசுத் தொகையுடன் நடைபெறும் இந்தப் போட்டி, பாடல் மற்றும் நடனம் என இரண்டு பிரிவுகளில் நடத்தப்படவுள்ளதாக சினிபெஸ்ட் நிறுவனத்தின் இயக்குநர் லியோன் நெல்சன் தெரிவித்தார்.
இறுதிப் போட்டியில் “கிராண்ட் ஸ்டேஜ் அல்டிமேட் பாடல் சாம்பியன்” மற்றும் “அல்டிமேட் நடன சாம்பியன்” ஆகிய இரு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
“Where Stars Are Born” (நட்சத்திரங்கள் பிறக்கும் இடம்) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் சினிஃபெஸ்ட் மலேசியாவின் விரிவான கலைப் பயணத்தின் முக்கிய அங்கமாக இந்தப் போட்டி அமைகிறது.
கடந்த ஒரு தசாப்த காலமாக சினிஃபெஸ்ட் மலேசியா ஏழு திரைப்பட விழாக்களையும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சினிஃபெஸ்ட் மலேசியா திரைப்பட விருதுகளையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
அந்த நிகழ்வில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதுடன், 33 விருதுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தி கிராண்ட் ஸ்டேஜ் போட்டியில் தனிநபர் கலைஞர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள் போட்டியாளர்கள் தங்களது ஒத்திகை (Audition) காணொளிகளை அதிகாரப்பூர்வ சமர்ப்பிப்பு வழிகள் மூலம் அனுப்ப வேண்டும்.
போட்டியாளர்களின் திறமைகள் 70 சதவீதம் நடுவர்களின் மதிப்பீடு மற்றும் 30 சதவீதம் பொதுமக்கள் வாக்கெடுப்பு அடிப்படையில் கணக்கிடப்படும்.
இதற்காக நடுவர்கள் குழு நியமிக்கப்படும்.
தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும் காலிறுதி (Quarter-Final) மற்றும் அரையிறுதி (Semi-Final) சுற்றுகளில் நேரடியாகப் பங்கேற்பர் என நெல்சன் தெரிவித்தார்.
பின்னர் சிறந்த 10 பாடகர்கள் மற்றும் 10 நடனக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் 20 இறுதிப் போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் களம் காண்பார்கள்.
மலேசியாவின் அடுத்த தலைமுறை கலை நட்சத்திரங்களை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டி, நாட்டின் பாடல் மற்றும் நடனத் துறைகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த போட்டிக்கான அறிமுக விழா மற்றும் செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் இன்று தலைநகரிலுள்ள பிரசித்திப்பெற்ற தங்கு விடுதியில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டின் முன்னணி கலைஞர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments