loader
43 ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி; பண்டார் செகாமாட் தமிழ்ப்பள்ளிக்கு புதிய விடியல் மடானி அரசின் துரித நடவடிக்கை!

43 ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி; பண்டார் செகாமாட் தமிழ்ப்பள்ளிக்கு புதிய விடியல் மடானி அரசின் துரித நடவடிக்கை!

செகாமாட், ஜூன் 15–

கடந்த 43 ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த பண்டார் செகாமாட் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டு மைதான நில பிரச்சினைக்கு மடானி அரசாங்கம் தீர்வை கொடுத்துள்ளது.

1983 ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த இப்பிரச்சினை காரணமாக, பள்ளி மாணவர்களுக்காக திட்டமிடப்பட்ட விளையாட்டு மைதானம் அமைக்கும் முயற்சி பல ஆண்டுகளாக தடைபட்டிருந்தது. குறிப்பாக ஹாக்கி விளையாட்டில் மாவட்ட மற்றும் தேசிய அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள பள்ளி மாணவர்களுக்கு, இந்த மைதானம் நீண்டகால தேவையாக இருந்து வந்தது.

கடந்த மே 31ஆம் தேதி, செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜலிஹா முஸ்தபா பள்ளிக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் வழி மாநில கல்வித்துறை, மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட நில அலுவலகம் வைத்திருந்த நில எல்லை ஆவணங்களுக்கும், MY LOT செயலியில் காணப்பட்ட தகவல்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த முரண்பாடுகளே இது நாள் வரையிலும் இப்பிரச்சினை நீடிக்க முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் தொகுக்கப்பட்டு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக, இன்று கல்வி அமைச்சர் நேரடியாக பள்ளிக்கு வருகை தந்து, நிலத்தைப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப அனுமதிக் கடிதத்தை வழங்கினார்.

இந்த நடவடிக்கை பள்ளி நிர்வாகம், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

43 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முதல் முக்கியமான படியாக இந்த அனுமதிக் கடிதம் கருதப்படுவதுடன், கல்வி தொடர்பான பிரச்சினைகளில் மடானி அரசாங்கம் காட்டி வரும் அர்ப்பணிப்பிற்கும் இது சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்நிலையில், கல்வி அமைச்சு, ஜொகூர் மாநில கல்வித்துறை, செகாமாட் மாவட்ட கல்வி அலுவலகம், பள்ளி நிர்வாகம், பிஐபிஜி, சமூகத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் டத்தோ ஸ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தபா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இது வெறும் நிலப் பிரச்சினைக்கான தீர்வு மட்டுமல்ல; மாணவர்களின் திறமைகளை வளர்க்கவும், அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தவும் உருவாக்கப்படும் புதிய வாய்ப்பாகும், என அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments

leave a reply

Recent News