கோலாலம்பூர், ஜூன் 10-
எஸ்டிபிஎம் (STPM) கல்வியைத் தொடரும் மாணவர்கள் தங்களது விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும், ஆசிரியர் பற்றாக்குறையை காரணம் காட்டி மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடாது என்றும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா வலியுறுத்தியுள்ளார்.
எஸ்டிபிஎம் என்பது அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான முக்கியமான கல்விப் பாதையாக இருப்பதால், மாணவர்கள் தங்களது உயர்கல்வி இலக்குகளுக்கு ஏற்ப பாடங்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பை இழக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
பள்ளிகளில் எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு ‘பேக்கேஜ்’ (Pakej) முறையில் பாடங்கள் வழங்கப்படுவதால், பல மாணவர்கள் தாங்கள் விரும்பும் கூடுதல் பாடங்களைத் தேர்வு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
குறிப்பிட்ட பாடத்திற்கு ஆசிரியர் இல்லாத சூழலில், அந்த பாடத்திற்கான ஆசிரியரை கல்வி அமைச்சிடம் கேட்டு பெற வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமையாகும். உங்களின் தவற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து விடாதீர்கள்.
“ஒரு மாணவர் சரியான பாடத்தைத் தேர்வு செய்ய முடியாவிட்டால், அவரது கனவுகளே சிதைந்து போகும். இது அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கும் தடையாக அமையும்,” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் வருடத்திற்கு சுமார் 40,000 மாணவர்கள் எஸ்டிபிஎம் தேர்வை எழுதுகின்றனர். அவர்களில் சுமார் 4,000 பேர் இந்திய மாணவர்கள் என மதிப்பிடப்படுகின்றனர். ஆனால், தமிழ்மொழி பாடத் தேர்வை எழுதுபவர்கள் அதிகபட்சமாக 500 பேர் மட்டுமே, அதாவது சுமார் 15 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தமிழ்மொழியைத் தேர்வு செய்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
எஸ்டிபிஎம் தேர்வில் தமிழ்மொழி பாடத்தை இந்திய மாணவர்கள் கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும். கடந்த 2024ஆம் ஆண்டு எஸ்டிஎம் தேர்வில் 526 மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தை தேர்வு செய்திருந்தனர். இரண்டாவது தவணையில் அந்த எண்ணிக்கை 426 மாணவர்களாக குறைந்த வேளையில் மூன்றாவது தவணையில் அதன் எண்ணிக்கை 453ஆக குறைந்துள்ளது. ஏன் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இந்நிலை மாற வேண்டும் என்றார் அவர்.
இந்நிலையில், மாணவர்களுக்கு உதவும் வகையில் ஸ்ரீ முருகன் நிலையம் வரும் ஜூலை மாதம் முதல் எஸ்டிபிஎம் தமிழ்மொழிப் பாடத்திற்கான இலவச இணையவழிக் கல்வியை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார்.
“தமிழ்மொழியைப் படிக்க விரும்பும் மாணவர்கள் தைரியமாக ஸ்ரீ முருகன் நிலையத்தில் கற்கிறோம் என்று பள்ளிகளில் கூறலாம். அவர்களுக்கு தேவையான கல்வி உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்,” என்றார்.
மேலும், மாணவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். ஏனென்றால் எஸ்டிபிஎம் பாடத் தேர்வை மாணவர்கள் இந்த ஒருவாரத்தில் முடிவு செய்தாக வேண்டிய சூழல் உள்ளது.
“அரசின் கல்விக் கொள்கையின்படி மாணவர்களுக்கு பாடங்களைத் தேர்வு செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, ஏன் பேக்கேஜ் முறை கொண்டு வரப்பட்டுள்ளது?” என அவர் கேள்வி எழுப்பினார்.
ஆசிரியர் பற்றாக்குறையை காரணம் காட்டி மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்க வேண்டாம் என்றும், அவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுரேன் கந்தா வலியுறுத்தினார்.
0 Comments