கோலாலம்பூர், மார்ச் 31-
மது போதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம் என மஇகா பிரிகேட் வலியுறுத்தியுள்ளது.
சமீபத்தில், பள்ளிக்கான புத்தகங்களை வாங்கி வீடு திரும்பிக் கொண்டிருந்த அமிருல் ஹபிஸ் ஒமர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவால் மனைவியும் மூன்று பிள்ளைகளும் தந்தையை இழந்துள்ள நிலையில், “இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் போன்றவை அலட்சியம் மற்றும் பொறுப்பின்மை காரணமாக நிகழும் துயரமான நிகழ்வுகளாகும். மது போதையில் வாகனம் ஓட்டும் பழக்கம் நாட்டில் அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரியது என மஇகா பிரிகேட் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மஇகா பிரிகேட் தேசியத் தலைவர் ஆண்ட்ரூ டேவிட், அரசாங்கம், குறிப்பாக போக்குவரத்து அமைச்சும், காவல்துறையும் சாலைப் போக்குவரத்து துறையும் மது போதையில் வாகனம் ஓட்டும் குற்றச்சாட்டுகளுக்கான சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், தடுப்புச் செயல்திறன் கொண்ட கடுமையான தண்டனைகள், கட்டாய சிறைத் தண்டனை மற்றும் அதிகபட்ச அபராதங்கள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதேபோல், “போர்ட் பானாஸ்” என வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முறையான சோதனைச்சாவடிகள் அமைத்து, தீவிரமான மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர், தேசிய கயாக் வீராங்கனை சிதி நுருல் மசியிதா மது போதையில் இருந்த ஓட்டுநரால் மோதி கடுமையாக காயமடைந்த சம்பவமும் நினைவுகூரப்பட்டது. இத்தகைய சம்பவங்கள் உயிரிழப்புகளையே அல்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலத்தையும் அழித்து விடுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மீண்டும் மீண்டும் குற்றம் புரியும் ஓட்டுநர்களுக்கு நீண்டகாலம் அல்லது வாழ்நாள் முழுவதும் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற கூடுதல் நடவடிக்கைகளையும் அரசு பரிசீலிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
“#GenANTIjenayah” என்ற இயக்கத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மஇகா பிரிகேட் விரிவுபடுத்தப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
0 Comments