போர்ட்டிக்சன், மார்ச் 29-
மக்கள் சக்தி தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தலைமையில் போர்ட்டிக்சனில் நடைபெற்ற நிகழ்வில், வரவிருக்கும் 16ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு கட்சி தீவிரமாகத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அவர் தனது தலைமை உரையில், தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை “Retreat” நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக கூறினார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட ஏமாற்றத்தை சரிசெய்யும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அடுத்த தேர்தலுக்காக 300 பேர் கொண்ட பணிப்படை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“ஒன்றாய் வெல்வோம்” என்பது இந்த நிகழ்ச்சியின் கருப்பொருளாக இருந்ததாகவும், மஇகாவுடன் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு, அடுத்த பொதுத் தேர்தலிலும் கூட்டாக பயணிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மக்கள் சக்தி கட்சி தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எந்த சவாலையும் எதிர்கொள்ள கட்சி தயாராக இருப்பதாகவும், உறுப்பினர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு கட்சியின் ஆதரவு தொடரும் என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள் பதவி வகித்திருப்பது அரசியல் நிலையற்ற தன்மையை காட்டுவதாகவும், பதவிக்கு வரும் சிலர் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நாட்டின் வளர்ச்சியில் மஇகாவின் பங்கு முக்கியமானது என்றும், அதை யாராலும் மறுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
வரவிருக்கும் பொதுத் தேர்தலில் மஇகா போட்டியிடும் தொகுதிகளில் மக்கள் சக்தி கட்சி முழு ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்களின் ஆதரவை பெறும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.
0 Comments