கோலாலம்பூர்,மார்ச் 18-
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு, உணவகத் துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பிரேஸ்மா தலைவர் டத்தோ முகமட் மொசின் தெரிவித்துள்ளார்.
வியாபாரிகள் தற்போது செலவினச் சுமையை தாங்கிக்கொண்டு வருகிறார்கள் என்றும், உடனடியாக உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துவதில்லை என்றாலும், இந்த நிலையை எவ்வளவு நாள் தாங்க முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது என அவர் கூறினார்.
இந்த நிலைக்கு நாங்கள் காரணமல்ல; உலகளாவிய சூழ்நிலைகளே காரணம். எனவே, அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், உணவகங்களில் விலை உயர்வை தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆனால் சில உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இத்துடன், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனை சந்திக்க முயற்சி செய்து வருவதாகவும் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.
அதேபோல், பிரதமரையும் சந்திக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு தொழிலாளர்கள் வேலைக்கு வராதது மேலும் சிக்கலை அதிகரித்துள்ளதாகவும், உணவகத் துறையை அரசு சாதாரண துறையாக பார்க்கும் போக்கு இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
ஆனால் உணவகத் துறை நாட்டின் முக்கிய துறைகளில் ஒன்றாகும் என்றும் டத்தோ முகமட் மொசின் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments