கோலாலம்பூர், மார்ச் 12-
மலேசியா ரிசைக்ளர்ஸ் அசோசியேஷன் (MRA), நாட்டின் மறுசுழற்சி (recycling) துறை எதிர்கொண்டு வரும் பல்வேறு சவால்கள் குறித்து விவாதிக்கத் தொழில் துறை பிரதிநிதிகளைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
MRA தலைவர் டத்தோ ஜோ சரவணன் கூறுகையில், அந்தச் சந்திப்பு தொழில் துறையினருக்கு முக்கியமான பல பிரச்சினைகளை நேரடியாக முன்வைக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது.
குறிப்பாக சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் ஸ்கிராப் பொருட்கள் மற்றும் மின்னணு கழிவுகள் (e-waste) தொடர்பான பிரச்சினைகள், சட்டப்படி செயல்படும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை பாதித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, இந்த பிரச்சினை நீண்ட காலமாகவே சட்டப்படி வணிகம் செய்து வரும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
“சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் ஸ்கிராப் பொருட்கள் மற்றும் e-waste பிரச்சினையை கையாள அரசாங்கம் உறுதி எடுத்திருப்பதை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.
இது விதிமுறைகளை பின்பற்றி செயல்படும் தொழில் துறை நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதியை அளிக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த பிரச்சினையை அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது, பொறுப்புடன் வணிகம் நடத்தும் நிறுவனங்களைப் பாதுகாப்பதோடு, மலேசியாவின் மறுசுழற்சி துறை நிலையான முறையில் வளர உதவும் என்றும் அவர் கூறினார்.
அதுடன், தொழில் துறையினரின் கருத்துகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாகக் கேட்க முனைந்திருப்பது, மறுசுழற்சி துறை வெளிப்படைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் நிர்வகிக்கப்படும் என்ற நம்பிக்கையை துறையில் செயல்படும் அனைவருக்கும் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments