loader
நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமையை காப்பதில் மடானி அரசு தோல்வியடைந்து வருகிறதா? -டத்தோ லோகபால கேள்வி

நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமையை காப்பதில் மடானி அரசு தோல்வியடைந்து வருகிறதா? -டத்தோ லோகபால கேள்வி


கோலாலம்பூர், மார்ச் 6– 
பல மதங்கள் மற்றும் பல இனங்கள் கொண்ட மலேசிய சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை பாதுகாப்பதில் மடானி அரசாங்கம் தோல்வியடைந்து வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) தலைவர் டத்தோ டாக்டர் லோகா பால மோகன்.

சமீபத்தில் சில பொறுப்பற்ற கும்பல் ஒரு இந்து கோவிலை இடிக்க பொதுவெளியில் மிரட்டல் விடுத்திருப்பது தேசிய அமைதிக்கும் ஒற்றுமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கூறினார்.

இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. இது நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சவாலுக்கு உள்ளாக்கும் செயல். இத்தகைய கும்பல்களை கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு முடியவில்லையா? அல்லது இது நடைபெறுவதற்கு அவர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கும்பல் சமூக ஊடகங்கள் மற்றும் பொதுத் தளங்களில் மக்கள் ஒன்று கூடிக் கோவிலை இடிக்க தூண்டி வருவது, தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233-ஐ வெளிப்படையாக மீறுவதாகவும், இதுவரை எந்தத் தெளிவான நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கத்தின் இந்த மௌனமும் செயலற்ற தன்மையும், அதிகாரம் வாய்ந்த யாரோ இந்த குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

சில நபர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் போல காட்சியளிப்பது கவலைக்குரியதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், பல இந்து கோவில்கள் காலனித்துவ காலத்தில் பிரிட்டிஷ் மற்றும் பின்னர் ஜப்பான் நிர்வாகங்களின் அனுமதியுடன், மெர்டேகாவுக்கு முன்பே கட்டப்பட்டவை என்பதை அரசு நன்கு அறிந்திருக்கிறது என்றார்.

அந்த காலகட்டத்தில் நில ஆவணப்படுத்தும் முறைகள் இன்றையதைப்போல் இல்லாததால், நூற்றாண்டுக்கும் மேலாக வழிபாடு நடைபெற்று வரும் இடங்களை இப்போது ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தால் சட்டவிரோதம் எனக் கூறுவது வரலாற்று உண்மைகளை புறக்கணிப்பதாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்து கோவில்கள் மற்றும் நில உரிமைகள் தொடர்பான நீண்டகால பிரச்சினைகளை தீர்ப்பது தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாதது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு வழிபாட்டு இடத்தை இடிக்க மிரட்டுவது தண்டனைச் சட்டம் பிரிவு 295, 295A மற்றும் 506 ஆகியவற்றை தெளிவாக மீறும் குற்றச்செயலாகும் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் சில நபர்களுக்கு சட்டம் பொருந்தாதது போல தோன்றுவது இரட்டை தரநிலை அல்லது தெரிவு செய்யப்பட்ட சட்ட அமலாக்கம் என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர் கூறினார்.

சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டிய நிலையில், சில தலைவர்கள் சட்டம் மீறுபவர்களை ஊடகங்களின் மூலம் கூட்டத்தை ரத்து செய்யுமாறு வேண்டிக் கொள்வது வெட்கக்கேடானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தலைமை என்பது சட்டம் மீறுபவர்களை வேண்டிக் கொள்வது அல்ல; பயமோ பேதமோ இல்லாமல் சட்டத்தை அமல்படுத்துவதே உண்மையான தலைமை,” என்றார்.

அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசியல் கண்ணாமூச்சி ஆட்டம் போதும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2007 ஆம் ஆண்டு போல மீண்டும் தெருக்களில் இறங்கி நீதியை கோர இந்திய சமூகம் விரும்பவில்லை என்றாலும், பொறுமையை பலவீனமாக கருதக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

நாட்டின் அமைதி, ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் சம்ரி வினோத், ஃபிர்தௌஸ் வோங், தமீம், சந்திரா உள்ளிட்ட அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் PPP வலியுறுத்துவதாக டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன் தெரிவித்தார்.

இந்து சமூகத்தினர் சமத்துவமான சட்ட பாதுகாப்பை கோரி தெருக்களில் இறங்க வேண்டிய நிலை உருவாகும் முன்பே அதிகாரிகள் கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News