கோலாலம்பூர், பிப்.19-
மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து மஇகா பணிப்படை (Briged MIC) கடும் கவலையும் வருத்தமும் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே பலமுறை புகாரளிக்கப்பட்டுள்ளதையும், அதற்கு உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் மஇகா பணிப்படையின் தலைவர் ஆண்ட்ரு டேவிட் சுட்டிக்காட்டினார்.
பல இன, பல மத மக்கள் இணைந்து வாழும் நம் நாட்டில், மதத்தை எந்த வடிவிலும் அதுவும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவமதிப்பது நாட்டின் நீண்டகால ஒற்றுமைக்கு களங்கம் விளைவிப்பதாக அவர் தெரிவித்தார்.
"குற்றமற்ற தலைமுறை” (Generasi Anti Jenayah) என்ற கொள்கையை முன்வைக்கும் இயக்கமாக, 3R (மதம், இனம், அரசியல் அமைப்பு) தொடர்பான விடயங்களில் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது மிகுந்த பொறுப்பற்ற செயல் என்றும், இது இனங்களுக்கிடையேயான பதற்றத்தை தூண்டி, நாட்டின் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கக்கூடியது என்றும் அவர் எச்சரித்தார்.
தொழில்நுட்பம் மக்களை ஒன்றிணைக்கும் கருவியாக இருக்க வேண்டும்; வெறுப்பை விதைக்கும் ஆயுதமாக அல்ல. மலேசிய குடிமக்களாக இருந்தாலும், வெளிநாட்டு பயணிகளாக இருந்தாலும், அனைவரும் நாட்டின் மத மற்றும் கலாசார உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இன, மத அடிப்படையிலான தூண்டுதல்களுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஒழுக்கப்பொறுப்பற்ற செயல் என்றும், எதிர்கால தலைமுறையின் நலனுக்காக பரஸ்பர மரியாதையை காக்க வேண்டும்.
நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமையை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அரசு தரப்பு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆண்ட்ரு டேவிட் கோரிக்கை விடுத்தார்.
0 Comments