loader
மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேரவை (பெர்த்தாமா) நன்னெறி வளர்க்க ‘நித்திரைக் கதைகள்’ தொடர் வெளியீடு: வாங்கி ஆதரவு கொடுங்கள்!

மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேரவை (பெர்த்தாமா) நன்னெறி வளர்க்க ‘நித்திரைக் கதைகள்’ தொடர் வெளியீடு: வாங்கி ஆதரவு கொடுங்கள்!

கோலாலம்பூர், டிச.9-
தமிழ்ப்பள்ளிகளின் முன்னேற்றத்தையும், மாணவர்களின் நன்னெறி வளர்ச்சியையும் முன்னிருத்தி செயல்பட்டு வரும் மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேரவை (பெர்த்தாமா), தனது புதிய கல்விசார் முயற்சியாக ‘வாசிப்பை நேசிப்போம் – நித்திரைக் கதைகள்’ எனும் கதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தொகுப்பினை வாங்கி தாங்கள் படித்த முன்னாள் பள்ளிகளுக்கு வழங்கும்படி பேரவை மக்களை கேட்டுக் கொள்கிறது.

பேரவையின் து. தலைவர் குமரன் மாரிமுத்து மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் ராமசங்கரன் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பெர்த்தாமாவின் நோக்கம், நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களை ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் செயல்படச் செய்வதே என கூறப்பட்டது.

தற்போது 528 தமிழ்ப்பள்ளிகள் நாட்டில் இயங்கினாலும், வெறும் 120 பள்ளிகளுக்கு மட்டுமே முன்னாள் மாணவர் சங்கங்கள் உள்ளன என்பதைக் கவலையுடன் பேரவை தெரிவித்தது. சங்கங்கள் இயங்கும் பள்ளிகளில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் பல பள்ளிகளில் இத்தகைய அமைப்புகள் உருவாக வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது.

பெர்த்தாமா தற்போது வெளியிடும் 10 புத்தகங்கள் அடங்கிய ‘நித்திரைக் கதைகள்’ தொகுப்பில் மொத்தம் 61 சிறுவர் கதைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கதைகள் குழந்தைகளுக்கு நன்னெறி, ஒழுக்கம், கருணை போன்ற உயர்ந்த பண்புகளை விதைப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

புத்தக விற்பனையின் வருவாய் முழுவதும் பேரவையின் கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், இந்த புத்தகத் தொகுப்பை வாங்கி மாணவர்களுக்கு வழங்க வேண்டுமெனவும் பேரவை நல்லுள்ளங்களை மீண்டும் கேட்டுக் கொண்டது.

கல்வி சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க ஒருமுறை நிகழ்ச்சிகள் போதாது; தொடர்ந்து, திட்டமிட்டு செயல்படும் பணிகளே பள்ளிகளுக்கு உண்மையான பலன்களை வழங்கும் என பெர்த்தாமா வலியுறுத்தியது. அதனை முன்னெடுக்க போதுமான நிதி நமக்கு தேவை என்றும் அவர்கள் கூறினர்.

பெர்த்தாமா நடைமுறைப்படுத்திய தமிழ்மொழி விழா சிறப்பாக நடத்தப்பட்டதாகவும், ஆனால் மானியம் பற்றாக்குறையால் அது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் தாக்கம் சிறப்பாக இருந்ததால் அதனை மற்ற தரப்புகள் தொடர்ந்து நடத்தி வருவதாக பார்த்திபன் கூறினார்.

அதே நேரத்தில், மாநில அளவிலும் செயல்பாடுகளை வலுப்படுத்த நான்கு மாநிலங்களில் மாநில பேரவைகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பங்களிப்பு, பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக பெர்த்தாமா வலியுறுத்தி, மேலும் பலர் இதில் இணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டது.

0 Comments

leave a reply

Recent News