கோலாலம்பூர்,டிச.4-
கடந்த நவம்பர் 24 ஆம் திகதி மலாக்கா டுரியான் துங்கால் பகுதியில் 3 ஆடவர்கள் போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் சுடப்பட்டு மரணம் அடைந்தனர்.
இது தொடர்பாக மலாக்கா மாநில போலீஸ் தலைமையகம் கொடுத்த செய்தி அறிக்கையில் போலீசார் நடத்திய சோதனையின் போது 3 நபர்கள் பாராங் கத்தியை கொண்டு போலீசாரை தாக்க முற்பட்டபோது, ஒரு போலீஸ் அதிகாரிக்கு வெட்டு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
தற்காப்பு காரணமாக அந்த மூவரை அதிகாரிகள் சுட்டதாகவும் அதில் இருவருக்கு ஏராளமான குற்றப் பதிவு உள்ளதாகவும் இன்னொருவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை என தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து இப்போது பதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தார்கள் தங்களது வழக்கறிஞருடன் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி ஒரு முரண்பாடான தகவலையும் ஒரு உரையாடல் பதிவையும் வெளியிட்டதுடன் இது தொடர்பாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.
இதனை தொடர்ந்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்பிரிவு துறை இந்த விசாரணை கையில் எடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்துரைத்த ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், முதலில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு தனது நன்றியும் பாராட்டையும் தெரிவித்தார்.
இந்த நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது, முரண்பாடான சில விவரங்கள் இருப்பதால் முழு விசாரணை செய்வதின் வாயிலாக அனைவருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். போலீஸ் படை மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு எழும்போது அரச மலேசிய போலீஸ் படை நாட்டின் சட்டம் மீது களங்கம் வராமல் இருக்க புக்கிட் அமான் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குறியது என டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
அதே நேரத்தில் ஒரு குரல் பதிவின் வாயிலாக சந்தேகத்தை எழுப்பியுள்ள குடும்ப உறுப்பினர்களும் நியாயம் கேட்டு நிற்கின்றனர்.
அந்த வகையில் எந்த ஒரு தலையீடும் இல்லாத விசாரணை நடத்தப்படவேண்டும். அதற்கு சுதந்திரமான விசாரணை ஆணையத்தை அமைக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவு விட வேண்டும் என டத்தோஸ்ரீ எம்.சரவணன் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.
இந்த விசாரணை ஆணையம் அமைக்க பட வேண்டும் என தாம் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு அதிகாரபூர்வ கடித்தை அனுப்பியுள்ளதாகவும் டத்தோஸ்ரீ எம் .சரவணன் தெரிவித்தார்.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நீதி அனைத்து மக்களுக்கு சமமாக கிடைக்க வேண்டுமெனவும் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
செய்தி : வெற்றி விக்டர்
0 Comments