கோலாலம்பூர், அக். 29-
47 ஆவது ஆசியான் உச்சிமாநாடு குறித்து பெரிகாத்தான் நேஷனல் தலைவர்கள் விமர்சனங்கள் செய்து வெளியிட்டுள்ள பொறுப்பற்ற குற்றச்சாட்டு அறிக்கைகளை தாம் கண்டிப்பதாக பிரதமர் துறை அமைச்சரின் அரசியல் செயலாளரும், கெஅடிலான் கட்சியின் மத்திய தலைமைக் குழு உறுப்பினருமான சிவமலர் கனபதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அவர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நமது நாட்டின் மரியாதையையும் மதிப்பையும் பாதிக்கும் வகையில் கூறப்பட்டவையாகும் என்றும், நாட்டின் நற்பெயரை களங்கம் செய்யும் அளவிற்கு குறுகிய அரசியல் நலனுக்காக விளையாடும் செயல் இதுவாகும் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
இந்த மாநாடிற்கு அமெரிக்க ஜனாதிபதி உட்பட அனைத்து நாடுகளின் தலைவர்களும் மலேசியாவிற்கு வருகை தந்தனர். அதனால் நம் நாடு மற்ற தலைவர்களின் சிந்தனையை ஆதரித்து அடிபணிகிறது என்பதற்கு பொருளல்ல.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கீழ் செயல்படும் தலைமைத்துவம் திறமையான மற்றும் முதிர்ந்த அரசியல்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைகிறது என அவர் கூறினார்.
அந்த வகையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் நம் பிரதமர் அமெரிக்க அதிபருடன் நடனம் ஆடும் காணொளி குறித்தும் சிவமலர் விளக்கமளித்துள்ளார்.
அது வெறும் மலேசிய கலாச்சார விருந்தோம்பல் நிகழ்வின் ஒரு பகுதி எனவும், பிரதமர் நாட்டின் கலாச்சாரத்தையும் விருந்தோம்பலையும் உலகுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் குறித்த நிகழ்வில் குறுகிய நேரம் பங்கேற்கும் வகையில் அந்நிகழ்வு ஏற்ப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
அந்த நிகழ்வு அவமானமானது என சித்தரிப்பது, மலேசிய மக்களுக்கே அவமரியாதை செய்வதற்கு சமம் எனவும், அந்த வகையில் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய கலைஞர்கள் மற்றும் கலாச்சார குழுவினரின் அர்ப்பணிப்பை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த முறை நடைபெற்ற 47ஆவது ஆசியான் உச்சிமாநாடு மலேசியாவின் பொருளாதார போட்டித்திறனை மேலும் வலுப்படுத்தியது, மற்றும் சமநிலை பொருளாதாரக் கொள்கைகளின் மூலம் நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்தியது என்றார் அவர்.
இந்த மாநாட்டின் வழி மலேசியா தனது பொருளாதார இறையாண்மையை தியாகம் செய்தது என்ற பெரிகாத்தான் நேஷனல் தலைவர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் அரசியல் பிரயோஜனத்துக்காக உருவாக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு எனவும், அது மக்களிடையே பயத்தை உருவாக்கி முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி ஆசியான் உச்சிமாநாடு மலேசியாவின் திறமை, பாதுகாப்பு, பங்கேற்பு மற்றும் சரியான ஒழுங்கமைப்பை வெளிப்படுத்திய சிறந்த சான்றாகும். இதுபோன்ற நிகழ்வுகளில் சிறிய தொழில்நுட்ப தவறுகளை அரசியல் ஆயுதமாக்கும் செயல்கள் அறிவில்லாத குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயல்கள் என்றார்.
இன்றைய அரசு மலேசியாவின் மரியாதைக்குரிய மற்றும் தார்மீகமான வெளிநாட்டு கொள்கை மரபை தொடர்ந்து பேணிக்காக்கும் அரசாகும். ஆனால் சிலர் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் இறையாண்மையை அவமதிக்கிறார்கள். இது மக்களுக்கு செய்யும் துரோகம் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-காளிதாசன் இளங்கோவன்
0 Comments