கொல்லைக்குப் போனாலும் கூட்டு ஆகாதென்பார்கள்; இத்தகைய மூத்த மொழி, நம்பிக்கை-நாணயம்-உண்மை-ஓர்மை-நேர்மை உள்ளிட்ட பண்பு நலனைத் தொலைத்தவர்களை மையமாகக் கொண்டு உருவான அனுபவ மொழியாக இருக்கலாம்.
அதேவேளை, உயிர் கொடுப்பான் தோழன் என்னும் நட்புமொழிக்கு இலக்கணமாக இரு நண்பர்கள் விளங்குவதைப் பார்த்து, வியப்பாகத்தான் இருக்கிறது.
சிலாங்கூர் மாநிலத்தில், பத்துமலை-செலாயாங் வட்டாரத்தில் டத்தோஸ்ரீ அரி, பாபு என்னும் இளைஞர்கள் இருவரும் பள்ளி நாட்கள் முதலே நண்பர்களாக அறிமுகமாகி, உறவுக்கும் மேலான அத்தகைய நட்பை தொடர்ந்து பேணிக் காத்து வந்துள்ளனர்.
காலவோட்டத்தில், இவ்விருவரும் வர்த்தகத்திலும் தங்களின் கலங்கமில்லா நட்பை நிலைநாட்டி உள்ளனர்.
செலாயாங் மருத்துவ மனைக்கு எதிரேவுள்ள ‘கெப்பிட்டல் செலாயாங் ஹால்’ என்னும் வர்த்தக அரங்கத்தைப் பராமரிக்கும் ஹரி, Oh Yeah Banana Leaf’ என்னும் வாழை இலை உணவகத்தை நடத்திவரும் பாபு இருவரும் இணைந்து ‘Oh Yeah Fressh Mart’ என்னும் பந்நோக்கு வர்த்தக மையத்தை கூட்டாக உருவாக்கி அதை வெற்றிகரமாகவும் நடத்தியும் வருகின்றனர்.
இந்தச் சுழலில், பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்குத் தெரியாமல் அவரின் அன்புத் தோழர் டத்தோஸ்ரீ அரி கமுக்கமாக பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்து, பெரிய கணையாழியையும் அணிவித்து, உற்ற தோழரை நட்பு வட்டத்தில் இன்ப வெள்ளத்தில் திளைக்க வைத்திருக்கிறார்.
இந்திய இளைய சமுதாயத்தில் நல்ல வண்ணம் வாழ்வதுடன் எத்தனையோ பேருக்கு வேலைவாய்ப்பும் அளித்து நட்பையும் சுற்றத்தையும் பேணிவரும் டத்தோஸ்ரீ அரியும் பாபுவும் கடின உழைப்புக்கும் தாழாத முனைப்புக்கும் அயராத உழைப்புக்கு சொந்தக்காரர்கள்;
இவற்றினும் மேலாக, கலங்கமில்லா நட்புக்கு இலக்கணமானவர்கள்!
0 Comments