சிலாங்கூர், குவாங் பட்டணத்தில் உள்ள கம்போங் பூங்கா ராயா குடியிருப்பில் வசிக்கும் மூதாட்டி திருமதி தங்கம்மாள், தன் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை தன் குடும்பத்தினர் புடைசூழ கோலாகலமாகக் கொண்டாடினார்.
மூன்று மகன்கள், 6 மகள்கள் என ஒன்பது மக்களைப் பெற்ற இந்த மகராசி, 35 பெயரப் பிள்ளைகள், 34 கொள்ளுப் பெயரப் பிள்ளைகள், உறவினர், நட்பினர் என பல நூற்றுக் கணக்கானோர் அணி திரள, தங்கம்மாள் கொண்டாடிய விழா நேற்று செலாயாங் கெப்பிட்டல் வர்த்தக வளகத்தில் நடைப்பெற்றது.
தமிழ் நாடு, நாகப்பட்டிணத்தில் 1925, அக்டோபர் 25-ஆம் நாள் பிறந்த இவர், சிறுமியாக இருந்தபொழுது தன் தந்தை பெரியான் மற்றும் தாயாருடன் கப்பல் மூலம் அன்றைய மலாயாவிற்கு வந்துள்ளார்.
அப்பொழுது, சிங்கப்பூர் தனி நாடாக இல்லாத நிலையில், நேரடியாக சிங்கப்பூரில் கொஞ்ச காலம் வாழ்ந்த நிலையில், சின்னையா என்பவரை மணம் முடித்தபின், பத்தாங் பெர்சுந்தை சுங்கை ரம்பைத் தோட்டத்திற்கு வந்து இரப்பர்த் தோட்டத்தில் பணி புரிந்திருக்கிறார்.
இந்தக் காலக்கட்டத்தில் தன் பிள்ளைகள் ஒவ்வொருவராக திருமணம் செய்துவைத்து, அதன் அடிப்படையில் அதிகமான மறுமக்கள் ஏராளமான பேர-கொள்ளுப்பேரப் பிள்ளைகளுடன் சிறப்பாக வாழ்ந்து வருகிறார் தங்கம்மா.
இவரின் கணவர் சின்னையா, 34 ஆண்டுகளுக்கு முன்னரே காலமாகி விட்டார்.
தற்பொழுது, இரண்டாவது மகன் இராமன்-சாவித்திரி இணையரின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்துவரும் தங்கம்மா, தனியாகக் குளித்து, தனியாக உடுத்தி, தானாக உண்ணும் ஆரோக்கிய நிலையுடன் உள்ளார்.
எந்த மருந்தும் சாப்பிடாத தங்கம்மாளுக்கு எப்போதும் பிடித்த சுவை பானங்கள் நெஸ்கஃபே, மைலோ, தேநீர் போன்றவை ஆகும் என்று தங்கம்மாவின் ஐந்தாவது பிள்ளையும் இரண்டாவது மகளுமான சகுந்தலா மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
இடையில் 95-ஆவது வயதில் தங்கம்மாவிற்கு குடல் அறுவைச் சிகிச்சை சுங்க பூலோ மருத்துவ மனையில் மேற்கொள்ளப்பட்டபோது, தங்களை கொஞ்சம் பயமுறுத்தி விட்டதாக, இந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த முகமது தேவா கூறினார்.
செர்டாங்கில் வசிக்கும் மூன்றாவது பிள்ளையும் முதல் மகளுமான சகுந்தராணியின் மகன்தான் இந்த தேவா.
உறுதியான பற்களைக் கொண்டிருக்கு நூற்றாண்டு மூதாட்டியான தங்கம்மாவிற்கு பிடித்த நிறம் நீல் வண்ணம் என்று சகுத்தலா தெரிவித்தார்.
0 Comments