பிரிக்பீல்ட்ஸ், அக் 27-
லிட்டில் இந்தியா பிரிக்பீல்ட்ஸ் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகின்றன. மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்கள் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக இருந்த பொழுது, 2010 அக்டோபர் 27ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா கோலாகலமாகத் திறக்கப்பட்டது. நமது பாரம்பரியத்தின் அடையாளமாக
இந்த லிட்டில் இந்தியா உருவாக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக், அப்போதைய இந்தியப் பிரதமரும் பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங் ஆகியோரின் முன்னிலையில் லிட்டல் இந்தியா கோலாகலமாகத் திறக்கப்பட்டதை நாம் அறிவோம்.
இது மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நல்லுறவின் அடையாளமாகவும் அமைந்தது.
இந்தியர்களுக்கென ஒரு தளம். சாலையின் இரு மருங்கிலும் நமது வணிக மையங்கள். இந்தியர்களின் கலையம்சங்களுடன், பிரதான நுழைவாயில், ஒவ்வொரு பக்கமும் நமது கலைகள் நிறைந்திருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டார் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்கள். இன்று 15 ஆண்டுகள் கடந்து விட்டன. எதிர்பார்த்ததைவிட மிக அற்புதமாக வளர்ந்து இந்தியர்களின் பிரதான வணிக மையமாக உருவாகியுள்ளது.
ஒரு மாமாங்கம் கடந்த பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா இந்தியர்களின் வணிக மையமாக உருவெடுத்திருப்பதில் நமக்கெல்லாம் பெருமையே. நூற்றுக்கணக்கான வியாபாரிகள் உருவெடுத்துள்ளதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். வரலாற்று ரீதியாக, பிரிக்பீல்ட்ஸ் என்பது உழைப்பு, தைரியத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு வர்த்தக நகரமாகும். எண்ணிலடங்கா உணவகங்கள், ஆடை, ஆபரணக் கடைகள், தங்கம் ஜொலிக்கும் நகைக்கடைகள், ஆலயங்களின் தரிசனம், கலாச்சார மையங்கள் என இந்தியர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் மையமாக பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா நமக்கான தளமாக அமைந்துள்ளது.
டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் முயற்சியில், திட்டத்தில் உருவான 'லிட்டில் இந்தியா பிரிக்பீல்ட்ஸ்' இன்று 15 வருடங்களைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிப்பது நமக்கெல்லாம் பெருமையே.
0 Comments