கோலாலம்பூர்,அக். 26-
பள்ளி என்பது கல்வி மற்றும் நற்பண்புகளை வளர்க்கும் இடமாக இருக்க வேண்டும், மது, புகையிலை அல்லது வேப் போன்ற தீய பழக்கங்களின் விளம்பர மேடையாக இருக்கக்கூடாது என்று மஇகா பிரிகேட் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை சீனப் பள்ளி மண்டபங்களில் மது பரிமாற அனுமதிக்கும் தற்போதைய வழிகாட்டுதலைத் தொடர தீர்மானித்ததை மஇகா பிரிகேட் கடுமையாக எதிர்த்து, அந்த முடிவு நாட்டின் சமூக மற்றும் ஒழுக்க மதிப்புகளுடன் பொருத்தமற்றது என தெரிவித்தது.
இளம் தலைமுறையை சிறு வயதிலிருந்தே நன்னெறி, ஒழுக்கம் மற்றும் நேர்மையுடன் வளர்க்க வேண்டியது மிக முக்கியம் என அது வலியுறுத்தியுள்ளது.
பள்ளிகள் என்பது குணநல வளர்ச்சியின் தூணாகும். அங்கு மது, புகையிலை, வேப் போன்றவற்றுடன் தொடர்புடைய எந்த நிகழ்வுகளும் அல்லது பிராண்டுகளும் இடம்பெறுவது கல்வி நிலையத்தின் மதிப்பை களங்கப்படுத்தும். நிகழ்வு பள்ளி நேரத்திற்கு வெளியே நடந்தாலும், அதன் தாக்கம் மாணவர்களின் மனநிலைக்கும், பள்ளியின் மரியாதைக்கும் கேடு விளைவிக்கும்.
“Corporate Social Responsibility (CSR)” என்ற பெயரில் மது நிறுவனங்களின் பங்களிப்புகளை ஏற்குவது ஒழுக்க ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அத்தகைய CSR உதவிகள், சமூக நலனுக்கே திசைதிருப்பப்பட வேண்டும் எனவும் தெரிவித்தது.
கல்வி நிறுவனங்கள் முழுமையாக “மது, புகை, வேப் ஆகியசை தடை செய்யப்பட்ட பகுதிகளாக தொடர வேண்டிய அவசியம் இருப்பதாகவும், கல்வி அமைச்சு தற்போதைய வழிகாட்டுதலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அது வழியுறுத்தியது.
அமைப்பு மேலும் குற்றமற்ற தலைமுறை (Generasi Anti Jenayah) இயக்கத்தின் கீழ், பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் (PIBG), அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இளைஞர்களை தீய வழக்கங்களிலிருந்து பாதுகாக்கச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.
ஒழுக்கமிக்க, சுத்தமான, உயர்ந்த மதிப்புகளைக் கொண்ட இளைஞர்களே நம் நாட்டின் எதிர்காலம்,” என்று மஇகா பிரிகேட்டின் தலைவர் எண்ட்ரு டேவிட் தனது அறிக்கையில் தெரிவித்து கொண்டார்.
0 Comments