கோலாலம்பூர்,அக்.15-
நாளுக்கு நாள் பள்ளிகளில் வன்முறை பரவத் தொடங்கி வருவதுடன், பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமாவில் நடந்த மாணவி கத்திக் குத்து சம்பவத்தை தொடர்ந்து
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் நாளுக்கு நாள் அதிகமான அச்சத்திலும் கவலையிலும் உள்ளனர் என
டிஎஸ்கே சமூக நல அமைப்பின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.
இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு என்ன நடந்தது? சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் பரவுகின்ற எதிர்மறை உள்ளடக்கங்களின் தாக்கமா இது? அல்லது வீடு மற்றும் பள்ளியில் ஒழுக்கக் கல்வி தளர்வதால் இந்த நிலை உருவாகியுள்ளது?
பிள்ளைகளை அன்போடு வளர்ப்பதோடு, பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கத்துடனும் வளர்த்திட வேண்டும் என்பதே கல்வியாளர்களின் வலியுறுத்தல் என அவர் தெரிவித்தார்.
முன்பு மாணவர்களிடையே நடந்த பகிடிவதை சம்பவங்கள் பெரும் பிரச்சினையாக இருந்த நிலையில், இப்போது அதைவிட ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. சமீபத்தில் பெட்டாலிங் ஜெயாவில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறையில் ஒரு மாணவி உயிரிழந்ததுடன், மற்றொரு மாணவனின் எதிர்காலமும் கேள்விக்குறி ஆகியுள்ளது.
இதனை கட்டுப்படுத்த மலேசிய கல்வி அமைச்சு பல முயற்சிகளை மேற்கொண்டாலும், அவற்றின் விளைவு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பையும் ஒழுக்கத்தையும் உறுதி செய்ய சிலர் பிரம்படி முறையை மீண்டும் கொண்டு வர பரிந்துரைக்கின்றனர்.
அதேபோல் பள்ளிகளில் சோதனை நடவடிக்கைகள் வழக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், இது மாணவர்கள் ஆயுதம், போதைப்பொருள், வேப் போன்றவற்றை பள்ளிக்குள் கொண்டு வருவதைத் தடுக்க உதவும் என சிவக்குமார் கூறினார்.
0 Comments