கோலாலம்பூர், ஆகஸ்ட் 17-
நாட்டில் தொடர்ந்து நடைபெறும் பகிடிவதை சம்பவங்களால் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
இதைத் தடுக்கும் வகையில் அரசு உடனடியாக துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதி போராட்டம் நடத்தப்படும் என மலேசிய பெர்சத்து ஒருங்கிணைப்பு நிர்வாகக் குழுவின் செலாயாங் தொகுதி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ரீஜன் குமார் ரத்ணம் தெரிவித்தார்.
அண்மையில் மட்டும், இந்த பகிடிவதையால் இரண்டு உயிரிழப்புகள் உட்பட பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், ரவாங் பகுதியில் தனது தலைமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கோரி அமைதி போராட்டம் நடத்தியதாக ரீஜன் தெரிவித்தார்.
மேலும், பகிடிவதையில் உயிரிழந்த தவனேஷ்வரிக்கு ஆதரவாக சமூக சேவகர் ஜனா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவரது போராட்டம் நியாயமானதாகும்; அவருடன் இணைந்து நாங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை குரல் கொடுப்போம் என ரீஜன் உறுதியளித்தார்.
இந்த வகையான சம்பவங்கள் இன, மத பேதமின்றி அனைவரையும் பாதிக்கக்கூடியது என்பதால் அரசு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமூகத்தில் ஏற்படும் பகிடிவதை மற்றும் துன்புறுத்தலை ஒழிக்க சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு பகிடிவதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
அத்துடன், சமூக ஊடகங்கள் மூலமாகவும் பல பகிடிவதைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இணையப் பகிடிவதையால் கூட உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன என்பது கவலைக்குரியது. நாளுக்கு நாள் இந்த பிரச்சினை சமூகத்தை தீவிரமாகப் பாதித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
-காளிதாசன் இளங்கோவன்
0 Comments