சுங்கை ரெங்காம், ஜூலை 21-
பிறவியிலேயே பார்வையை இழந்தாலும் கல்வியில் உயர்ந்த சாதனையைப் பெற்று மாணவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார் ஆசிரியர் லட்சுமி பிரியா.
அவரது முயற்சி, மனதின் வலிமையும் விடாமுயற்சியும் தான் வெற்றிக்கான விசை என்பதை நினைவூட்டுகிறது. அந்த வகையில் ஶ்ரீ முருகன் நிலையம் தனது மாணவர்களுக்கு ஆசிரியர் லட்சுமி பிரியாவை அடையாளம் காட்டி அவர்களுக்கு மன வலிமையையும் உற்சாகத்தையும் வழங்கியுள்ளது.
ஸ்ரீ முருகன் நிலையம் தனது மாணவர்களுக்கு
கல்வி ஜெயம் மற்றும் கல்வி விரதம் 2025
என்ற திட்டத்தின் வழி தன்முனைப்பு கருத்தரங்கை நடத்தியது.
நேற்று சுங்கை ரெங்காம் தமிழ்ப்பள்ளியின் மாநாட்டு மையத்தில் காலை 8 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடந்த இந்த நிகழ்வில் பெற்றோர்கள், மாணவர்கள், கல்வி ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்படும் “கல்வி ஜெயம்” திட்டம், பிள்ளைகளின் கல்விப் பயணத்தில் பெற்றோரின் பங்களிப்பை வலியுறுத்தும் ஒரு தனித்துவமான முயற்சியாகும். இது பாடநூல் மையமில்லாமல், தமிழ் மரபின் முறை மற்றும் வாழ்வியல் அடிப்படைகளுடன் சிந்தனையை வளர்க்கும் திட்டமாக அமைந்துள்ளது.
நிகழ்வில், மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், பெற்றோர்கள் எவ்வாறு கல்வி பயணத்தில் தீவிரமாக பங்கேற்கலாம், வீட்டுப்பாடங்களுக்கு உதவலாம், மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி மற்றும் நற்பண்புகளை ஊக்குவிக்கலாம் என்பன குறித்த பல்வேறு கருத்தரங்குகள், செயன்முறை பயிற்சிகள் மற்றும் யுக்திகள் பகிரப்பட்டன.
திருவள்ளுவர் வலியுறுத்திய "கற்க கசடறக் கற்ற பிற பின்னும் நிற்க அதற்குத் தக" எனும் பாடலை அடிப்படையாகக் கொண்ட “கல்வி ஜெயம்” திட்டம் அறிவு சார்ந்த கல்வியை மட்டுமல்லாமல், வாழ்க்கை வழிநடத்தும் பண்பாட்டு கல்வியையும் வலியுறுத்துகிறது.
இந்நிகழ்வின் ஒரு முக்கிய அம்சமாக “கல்வி விரதம்” என்ற நிலைத்த முயற்சி அறிமுகம் செய்யப்பட்டது. கல்வி என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் பயணம் என்பதை சுட்டிக்காட்டும் இவ்விரதம், தனிநபர் வளர்ச்சி, ஆன்மீக உயர்வு மற்றும் சமூக நலனுக்கான முழுமையான அர்ப்பணிப்பாகும்.
டான்ஸ்ரீ எம். தம்பிராஜா அவர்களின் பார்வையின் அடிப்படையில், கல்வி என்பது மதிப்புமிக்க சமூகப் பணியாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தின் விளக்கமாகவும் இந்த விழா அமைந்தது. ஒவ்வொரு இல்லமும் ஒரு குருக்குள நிலையமாக, பெற்றோர்களும் குழந்தைகளின் முதல் குருவாகச் செயல்பட வேண்டும் என்பது விழாவின் முக்கியக் கோரிக்கையாகும் என்பதை ஶ்ரீ முருகன் நிமையம் தெரிவித்தது.
“கல்வி ஜெயம் திட்டம், பெற்றோரின் தீவிர பங்களிப்புடன் இந்திய சமுதாயத்தில் ஒரு புதிய கல்விப் புரட்சியை உருவாக்கும் என்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம் என ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் அறிவித்தது.
-காளிதாசன் இளங்கோவன்
0 Comments