loader
13ஆவது மலேசிய திட்டத்தில்  இந்திய சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்புகள் தொடர்பாக 11 பரிந்துரைகள்!

13ஆவது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்புகள் தொடர்பாக 11 பரிந்துரைகள்!

கோலாலம்பூர், ஜூலை 3-
13 ஆவது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் தொடர்பாக 11 பரிந்துரைகள் செய்யப்பட்டிருப்பதாக கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

கல்வி, பொருளாதாரம்,  தொழில் திறன் பயிற்சி தொடர்பாக இந்த பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக நான்கு பயிற்சி பட்டறைகள் நடத்தி ஆய்வுகளை திரட்டினோம்.
சமுதாயத்தின் கருத்துகளை கேட்டறிந்து அதன் பின்னர் இந்த 11 பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டது.

இந்த பரிந்துரைகளை பொருளாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ நோர் அஸ்மியிடம் ஜூன் 23 ஆம் சமர்ப்பித்து விட்டோம் என்று அவர் சொன்னார்.

மலேசிய இந்திய சமுதாயத்திற்கு ஒரு சமமான வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதேசமயம் மித்ரா மீதான நம்பிக்கையை மீண்டும் தட்டியெழுப்ப வேண்டும்.

மேலும் கல்வியை பாதியிலேயே கைவிடும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவது பெரும் கவலை அளிக்கிறது.

இதற்கு உடனடியாக சிறந்த  தீர்வு காண வேண்டும். ஒரு கல்வி கற்ற சமுதாயமாக இந்தியர்கள் இருக்க வேண்டும்.

இந்திய மாணவர்கள் கல்வியை முழுமையாக முடிக்க வேண்டும். பிறகு அவர்களுக்கு தொழில் திறன் பயிற்சி கல்வி வழங்கப்பட வேண்டும்.
இதன் வழி அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம். அதேசமயம் அனைத்து குழந்தைகளுக்கும் பாலர்பள்ளி கல்வி  கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.

டிஜிட்டல் வணிக துறை, பசுமை தொழில்நுட்ப துறை, இளம் தொழில் முனைவோர் துறையில் இந்தியர்கள் அதிக அளவில் கால் பதிக்க உதவிட வேண்டும். கல்வி, பொருளாதரத்தில் பின் தங்கி விட்ட இந்திய சமுதாயத்திற்கு உதவிட அரசாங்கம் முன் வர வேண்டும்.

மக்கள் தொகையில் 6.1 விழுக்காடாக இருக்கும் இந்திய சமுதாயம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு சிறந்த நிலையில் இருக்க நமது மாணவர்கள், இளைஞர்கள், மகளிர்கள் உருமாற்றம் பெற வேண்டும்.

குறைந்த மாணவர்களை கொண்டிருக்கும் தமிழ் பள்ளிகள் இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் இடமாற்றம் செய்வது இந்த பரிந்துரையில் முக்கிய அங்கமாகும்.

அதேசமயம் பாலர் பள்ளிகள் இல்லாத தமிழ்ப் பள்ளிகளில் கண்டிப்பாக பாலர் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.

பிரதமர் துறை அமைச்சின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கனுடன் இணைந்து அரசு சார்பற்ற இயக்கம்  இந்த பரிந்துரைகள் தயாரிப்பில் பங்கு எடுத்ததாக அவர் சொன்னார்.

இன்று பெட்டாலிங் ஜெயா ஜாலான் காசிங் மகாராஜா உணவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News