பெட்டாலிங் ஜெயா, மே 16-
சிலாங்கூர் ஓட்டபந்தய சங்கத்தின் ஆண்டு கூட்டத்தில் சமர்ப்பித்த கணக்கறிக்கையில் முறைகேடுகள் இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. அதனை முறையாக சமர்பிக்க இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டும் இதுவரை முறையான பதில் கிடைக்காததால் சங்கத்தின் கீழ் உள்ள 9 மாவட்டங்களில் 6 மாவட்டங்கள் சங்கத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி இச்சங்கத்தின் ஆண்டுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் சமர்பிக்கப்பட்ட கணக்கறிக்கையில் குளறுப்படிகள் இருந்ததால் இதன் தொடர்பில் கேள்விகள் எழுப்பட்டன. அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஆண்டுக் கூட்டத்தை ரத்த செய்ய தலைவர் முற்பட்டபோது கணக்கறிக்கையை இரு வாரத்தில் சமர்பிக்கும்படி கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனை சங்க தலைமைத்துவமும் ஏற்றுக் கொண்டது.
ஆனால் இன்றுடன் இருவாரங்கள் ஆகி 4 நாட்கள் கடந்து விட்டன. ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ எஸ்.எம்.முத்து தெரிவித்தார்.
சங்கத்தின் நிலை இப்படி இருந்தால் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சுக்மா போட்டிக்கு விளையாட்டாளர்களை எப்படி தயார் செய்வது? இதனை அப்படியே விட்டுவிட முடியாது. அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் சங்கத்தின் அடுத்த ஆண்டுக் கூட்டம். அதவரை பொறுத்திருக்கவும் முடியாது என அவர் சொன்னார்.
சங்கத்தை முறைப்படி வழிநடத்த தெரியாத தலைமைத்துவம் எங்களுக்கு தேவையில்லை. அதனால் சங்கத்தின் கீழ் உள்ள 9 மாவட்டங்களில் 6 மாவட்டங்கள் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகளின் சார்பாக டத்தோ எஸ்.எம்.முத்து தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம் என்றும் அவர் சொன்னார்.
சிலாங்கூர் ஓட்டப்பந்தய சங்கத்தின் கீழ் சிப்பாங், உலு சிலாங்கூர், கிளாங், பெட்டாலிங், கோல லங்காட், உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
0 Comments