ரோம், ஏப். 21-
ரோமன் கத்தோலிக் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் இன்று ஏப்ரல் 21ஆம் தேதி காலமானார் என்று வாடிகன் வெளியிட்ட வீடியோச் செய்தியில் தெரிவித்துள்ளது.
போப் அவர்களின் மறைவு குறித்து வாடிகனின் தொலைக்காட்சியில் கார்டினல் கேவின் பாரல் கூறியதாவது:
அன்பான சகோதர சகோதரிகளே, எங்கள் பரிசுத்த தந்தை போப் பிரான்சிஸின் மறைவை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறேன். இன்று காலை 7.35 மணிக்கு ரோம் ஆயராக இருந்த பிரான்சிஸ், இறைவனின் வீட்டிற்குத் திரும்பினார் என அவர் அறிவித்துள்ளார்.
உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ். இவர் வாடிகன் நகரத்தில் வசித்து வந்தார். பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த போப் அவர்கள் 38 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். உடல் நலம் சற்று தேறிய நிலையில் கடந்த மார்ச் 23 ஆம் திகதி மீண்டும் வாடிகன் திரும்பி தனது வழக்கமான பணிகளை பார்க்கவும் தொடங்கினார்.
நேற்று நடைபெற்ற ஈஸ்டர் முன்னிட்டு கத்தோலிக்கர்களுக்கு ஆசி வழங்கியிருந்தார். இந்நிலையில், இன்று ஏப்ரல் 21 ஆம் திகதி காலை போப் பிரான்சிஸ் காலமானதாக, வாடிகன் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அவரது மறைவிற்கு, பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
0 Comments