லோஸ் ஏஞ்சல்ஸ், ஜன 11-
அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸில் பற்றிய காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் உடைமைகளை விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ள நிலையில், அப்பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடப்பதால் போலீசார் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ ஏற்பட்டது. மழையில்லாமல் வறண்டு புதர் மண்டிய நிலப்பரப்பு மற்றும் மலைப் பகுதியில் இருந்து கடலை நோக்கி வீசும் கடுமையான காற்று ஆகியவை காற்றுத் தீ பற்ற காரணமாக கூறப்படுகிறது.
லோஸ் ஏஞ்சல்ஸ் கடற்கரையை ஒட்டியுள்ள நகரம் என்பதால் அங்கு வேகமாக வீசும் காற்று, காட்டுத் தீ மற்ற இடங்களுக்கு பரவும் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.
பாலிசேட்ஸ், ஈட்டன், கென்னத் ஆகிய பகுதிகளில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், லோஸ் ஏஞ்சல்ஸ் எல்லைப் பகுதியில் உள்ள வென்டுரா கவுன்ட்டியில் புதிதாக நேற்று காற்றுத் தீ பற்றியுள்ளது. இதுவரை லோஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில், பாலிசேட்ஸ், ஈட்டன் அல்டாடெனா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மூன்று நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயால் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், அலுவலக கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. 1.76 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு, தீயில் சிக்கியுள்ளவர்களை தேடி மீட்டு வருகின்றனர்.
0 Comments