கோலாலம்பூர், டிச. 28-
நோர்வேவில் உள்ள அஸ்வாட்நெட் ஏரியின் அருகே கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த சுற்றுலா பேருந்து விபத்தில் நான்கு மலேசியர்கள் காயமடைந்துள்ளனர் என விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது.
விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கையில், இந்த நான்கு மலேசியர்கள் லோஃபோட்டனில் உள்ள தோன் என்ற தங்கும் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சொற்ப காயங்களுடன் உயிர்தப்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த பயணிகள் சிலர் லோஃபோட்டனில் உள்ள தோன் தங்கும் விடுதி மற்றும் ஸ்டோக்மார்க்னெஸில் உள்ள ஹோட்டல் ரிச்சர்ட் ஆகிய இரு தங்குமிடங்களில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மலேசிய துதரகம் நார்வே அதிகாரிகளுடன் இணைந்து சம்பவம் தொடர்பான மேலும் தகவல்களை கண்டறிந்து வருவதுடன், பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.
விபத்தின் பின்னணியில் கடுமையான குளிர்கால வானிலை, கனமழை, கடும் காற்று மற்றும் 1,500 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிகழ்விடத்தின் இடர்பாடுகள் மீட்புப் பணிகளை சிரமமாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 26ஆம் திகதி அன்று, உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணியளவில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கி அருகில் உள்ள ஏரியில் விழுந்தது.
சீனா, சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, நெதர்லாந்து, சுடான், பிரான்ஸ் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அப்பேருந்தில் இருந்துள்ளனர்.
இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப்பணிகள் கடுமையான வானிலை சவால்களை எதிர்கொண்டிருந்த போதிலும், மீதமான பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
உதவி தேவைக்கு தொடர்பு கொள்ள
மலேசிய தூதரகத்தின் உதவி தேவைப்படும் நிலையில், ஸ்டாக்ஹோம் துாதரகத்தை கீழே உள்ள தொடர்பு வழிகளில் அணுகலாம்:தொலைபேசி: +46 8440 8400 (பொது விசாரணை) / +46 73 536 9152 (ஆபத்து நேரத்தில்)
மின்னஞ்சல்: mwstockholm@kln.gov.my
-காளிதாசன் இளங்கோவன்
0 Comments