வாஷிங்டன், டிச 14-
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். தற்போதைய அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு சிறையில் உள்ள 1,500 கைதிகளுக்கு கருணை வழங்கிய பைடன், அவர்களின் தண்டனைக் காலத்தை குறைத்துள்ளார். அதேசமயம், தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 39 பேருக்கு அவர் பொதுமன்னிப்பு வழங்கினார்.
இது குறித்து பைடன் வெளியிட்டுள்ள செய்தியில், 'செய்த தவறுக்கு வருந்தி, மறுவாழ்வில் ஈடுபடுவோருக்கு, அதிபர் என்ற முறையில் கருணை காட்டுவதில் எனக்கு மகிழ்ச்சி.
எனவே, தங்கள் சமூகங்களை வலிமையாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட 39 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது என கூறினார்.
நீண்ட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 1,500 பேரின் தண்டனைகளையும் நான் குறைத்துள்ளேன். அவர்களில் பலர் இன்றைய சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் கீழ் குறைந்த தண்டனைகளைப் பெறுவர்' என, தெரிவித்துள்ளார்.
0 Comments