பெங்களூர், செப் 24-
காவிரி 5 ஆம் கட்ட குடிநீர் திட்டத்தின் இறுதிகட்டப் பணிகளை, துணை முதல்வர் சிவகுமார் ஆய்வு செய்தார்.
இந்த திட்டம் வரும் விஜயதசமிக்குள் துவக்கி வைக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
பெங்களூர் நகரம் நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில், புறநகர் பகுதிகளின் 110 கிராமங்கள், பெங்களூர் மாநகராட்சிக்குள் 2007ல் இணைக்கப்பட்டன. அந்த கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வசதி ஏற்படுத்துவதற்காக, காவிரி 5 ஆம் கட்ட திட்டம் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக அரசிடம் போதுமான நிதி இல்லை என்பதால், ஜெய்கா நிறுவனத்தின் உதவியுடன் 5,550 கோடி ரூபாயில், 2014ல் ஆரம்பிக்கப்பட்ட திட்டப் பணிகள், தற்போது முடிக்கப்பட்டுள்ளன.
பணிகள் முடிந்த நிலையில், சோதனை முறையில் குழாய்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி நடக்கிறது. இந்நிலையில், துணை முதல்வர் சிவகுமார், நேற்று முடிந்த பணிகளை ஆய்வு செய்தார். இவருக்கு, பெங்களூர் குடிநீர், வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் திட்டம் குறித்து, முழுமையாக விளக்கினார்.
முதலில், கெங்கேரி ரயில் உள்ள ராட்சத போர்வெல் குழாய் பணிகளை ஆய்வு செய்தார். பின், கனகபுரா தாலுகா, ஹாரோஹள்ளி சென்று, குழாய்களுக்கு நீர் அனுப்பும் இயந்திரத்தை பார்வையிட்டார். இறுதியாக, மாண்டியா மாவட்டம், மலவள்ளி அடுத்த தொரேகாடனஹள்ளியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை ஆய்வு செய்தார்.
0 Comments