loader
மலேசியத் தொழிலாளர்களை ஏமாற்றுகிறதா HSBC? - நீதி கேட்டு தொழிலாளர்கள் போராட்டம்!

மலேசியத் தொழிலாளர்களை ஏமாற்றுகிறதா HSBC? - நீதி கேட்டு தொழிலாளர்கள் போராட்டம்!

(சண்)

மலேசியத் தொழிலாளர்களை HSBC வங்கி நிர்வாகம் ஏமாற்றுவதாக, இன்று தலைநகர் HSBC வங்கியின் முன் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் போரட்டம் நடத்தினர்.

வங்கி ஊழியர்களின் தேசிய சங்கம் (NUBE) என்பது மலேசியாவில் உள்ள நிதிச் சேவைகள் துறையில், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களைப் பிரதிநிதிக்கும் ஒரு தொழிற்சங்கம். இந்தச் சங்கத்தில் தற்போது 20,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் சுமார் 200 உறுப்பினர்கள் வாடிக்கையாளர் சேவை வங்கியாளர் பிரிவில் (Customer Service Banker) உள்ளவர்கள்.

HSBC கடந்த சில ஆண்டுகளாக இந்தத் தொழிற்சங்கத்தை முடக்கவும், பிளவுப்படுத்துவதற்குமான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த எச்.எஸ்.பி.சியின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டூவர்ட் மில்னே அச்சங்கத்தை முடக்கும் வேளையில் ஈடுபட்டதாக எதிர்ப்பாளர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சங்க உறுப்பினர்கள் மீது தற்காலிக வேலை நிறுத்தம் மற்றும் காரணம் கோரும் கடிதங்களை வெளியிட்டு அந்த அதிகாரி அச்சுறுத்தியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரின் முன்னோர் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் என்ன செய்தார்களோ அதையே ஸ்டூவர்ட் மில்னே செய்வதாகவும் அந்த துண்டறிக்கை கூறுகிறது.
ஒரு சிலரை மகிழ்விக்கவும், மலேசியர்களின் செல்வத்தை அபகரிக்கவும், பிளவு ஏற்படுத்தி மலேசியத் தொழிலாளர்களை ஏழ்மைப்படுத்துகின்றனர்.
குறிப்பாக ஏழ்மையான மலேசியத் தொழிலாளர்களுக்குத் துரோகம் செய்ய,  அயல்நாட்டில் இருக்கும் தலைமை அதிகாரியாகிய மலேசியர் ஒருவர், ஸ்டூவர்ட் மில்னேவின் குற்றச் செயலுக்குத் துணையிருப்பதாக அந்த அறிக்கை பகர்கிறது.

அவரது குற்றச் செயல்கள் என்ன?
1. HSBC  B40 தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்துகிறது
2. தொழிற்சங்கத்தைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
3. மலேசிய சட்டங்களை அவமதிக்கிறது
4. மலேசிய அரசாங்கத்தை அவமதிக்கிறது
5. வங்கி வாடிக்கையாளர்களை பாரபட்சப்படுத்துகிறது
6. தேசிய மொழியான மலாயை அவமானப்படுத்துகிறது
என, குற்றச்சாட்டுகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன அந்த அறிக்கையில்.
HSBCயில் இருக்கும் அனைத்து B 40 ஊழியர்கள் முன்வைக்கும் இந்த முறையீட்டை, மலேசியர்கள் கவனத்தில் கொண்டு ஆதரவு தருமாறும் அவ்வூழியர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதன் மூலம் மலேசியாவில் பணிபுரியும் அயல்நாட்டவர்கள், மலேசிய சட்டதிட்டத்தையும்,  மலேசியத் தொழிலாளர்களையும் மதிக்கவும், நன்முறையில் நடத்தவும் உறுதுணையாக அமையும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்!

0 Comments

leave a reply

Recent News