loader
கால்பந்து துறையில் பீடுநடைப் போடும் கீர்த்தனா

கால்பந்து துறையில் பீடுநடைப் போடும் கீர்த்தனா

 

சுபாங் ஜெயா, ஜூன் 5- ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கால்பந்து விளையாட்டில் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் பீடுநடைப் போட்டு வருவதோடு, தன் வயதுடைய பெண்களுக்கும் கால்பந்து பயிற்சியை வழங்கி வருகிறார் என்பது பலரையும் ஆச்சரியம் கொள்ள வைக்கும்.

 

அத்தகைய சீரிய பணியில் ஈடுபட்டு கால்பந்து விளையாட்டில் இளம்பெண்களை குறிப்பாக இந்தியப் பெண்களை மிளிர வைத்து அவர்களை சிங்கப் பெண்களாக உருவாக்குவதே தமது தலையாய லட்சியம் என்று கூறுகிறார்ஷா ஆலாம் தாமான் ஶ்ரீ மூடாவைச் சேர்ந்த  கீர்த்தனா சுப்பிரமணியம்.

 

 

 

 

 

 

 

 

 

 

முதல் இடத்தை வென்ற அணி


எந்த விளையாட்டாக இருப்பினும், அதை பாலினம் ரீதியாகப் பார்க்காமல், திறமை அடிப்படையில் களமிறங்க வேண்டும் என்பதே தமது எண்ணம் என்று கூறிய கீர்த்தனா, சிறுவயது முதலே தமக்குள் இருந்த கால்பந்து மீதான ஆர்வத்திற்கு குடும்பத்தினரும் முழு ஆதரவு வழங்கியதாகக் கூறினார்.

 

''தொடக்கத்தின் கால்பந்து விளையாட்டின் மீது இருந்த ஈடுபாட்டால் நான் ஒரு பெண்கள் குழுவில் இணைந்து விளையாடினேன். அக்குழுவின் பயிற்றுநர் எனக்குக் கற்றுக் கொடுக்கும் நுணுக்கங்களை நான் எனது பல்கலைக்கழக குழுவிற்கு போதிப்பேன். அதைத் தொடர்ந்து கால்பந்து அரங்கிற்குச் சென்று அவர்கள் விளையாடும் விதம் மற்றும் நுணுக்கங்களை துல்லியமாக பார்த்து சுயமாகக் கற்றுக் கொண்டேன். அதேவேளையில் கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போதுள்ள இளம் பெண்களுக்கு கால்பந்து மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது,'' என்று அவர் குறிப்பிட்டார்.

 

இரண்டாம் நிலை வெற்றியாளர்கள்


தமது ஆர்வத்தின் அடுத்தகட்ட முயற்சியாக இன்று சுபாங்ஜெயாவிலுள்ள SPORTIZZA விளையாட்டரங்கில், LADY BOSS SUPER CUP என்ற பெயரில், வயது வரம்பற்ற நல்லெண்ண கால்பந்துப் போட்டி ஒன்றை ஏற்று நடத்தி இருந்தார்.

 

''புதிய விளையாட்டாளர்களுக்கு அதிகமாக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்ற காரணத்தால் நிபுணத்துவ விளையாட்டாளர்களுக்கு மட்டும் இப்பபோட்டியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றை போட்டியில் 32 குழுக்கள் களமிறங்கியுள்ளன. முதல் நிலை வெற்றிக் குழுவிற்கு 1,800 ரிங்கிட் வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளர்களுக்கு 1,000 ரிங்கிட் மற்றும் 500 ரிங்கிட் வழங்கப்படுகிறது. நான்காவது நிலை வெற்றியாளர்களையும் ஊக்குவிக்க அவர்களுக்கு 300 ரிங்கிட் வழங்கப்படுகிறது. அவ்வற்றுடன் பல்வேறு விருதுகளும் வழங்கப்படுகிறது,'' என்று அவர் கூறினார்.

 

மூன்றாம் இடத்தை வென்ற அணி


இப்போட்டியைத் தொடர்ந்து அடுத்த ஓரிரு மாதங்களில் பெண்களுக்கான கால்பந்து போட்டியையும் நடத்த தாம் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய கீர்த்தனா, இன்று நடைபெற்ற போட்டியின் மூலமாக திரட்டப்படும் நிதியைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதரவற்ற இல்லங்களில் கல்வி வளர்ச்சித் திட்டத்தை தாம் முன்னெடுக்கப் போவதாக SAI YOUTH ACADEMY மையத்தின் தோற்றுநருமான கீர்த்தனா குறிப்பிட்டார்.

 

''பொதுவாக ஆதரவற்ற இல்லத்திற்கு உணவுப் பொருட்களே வழங்குவர். ஒரு மாறுதலுக்காக இப்போட்டியில் கிடைக்கப்பெறும் பணத்தைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சில இல்லங்களுக்கு குறு நூலகம் ஒன்று அமைத்துக் கொடுப்பதுடன் வாசிப்பதற்கான சில தளவாடங்களும் வாங்கிக் கொடுக்கப்படும்,'' என்றார் அவர்.

 

இதனிடையே, நேற்று மாலை நான்கு மணி வரை நடைபெற்ற இப்போட்டியில் OLD KK UNITED குழு முதல் பரிசை வென்ற வேளையில், SP FC, REBELS FT, MTA FC ஆகியவை முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தைப் பிடித்தன.

 

0 Comments

leave a reply

Recent News