(வெற்றி விக்டர்)
கோலாலம்பூர் ஜூன் 26-
அங்கவீனர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்த மாரியப்பன் பெருமாள் என்ற எடை தூக்கும் விளையாட்டு வீரரை அறியாதவர்கள் இருக்கமுடியாது. அங்கவீனர்களால் சாதனை புரிய முடியும் என்பதற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு. பலருக்கு முன்னுதாரணமாகத் தனது விளையாட்டுத் துறையில் சாதனைகளைக் குவித்த மாரியப்பனை தான் நமக்குத் தெரியும்.
ஆனால், அவரின் தியாகம், அர்ப்பணிப்பு, வாழ்க்கை பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. திரைக்குப் பின்னால் தன்னைபோல் உடல் குறைபாடுடைய பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட மனித நேயராகவும் இருக்கிறார் இவர். மூன்று பிள்ளைகளுக்கு அப்பா என்பது, அவரும் அவரது மனைவியும் இருக்கும் சூழலில், அவர் தூக்கும் எடையைவிட பாரமான பொறுப்புதான். அப்படியொரு குடும்பப் பொறுப்பினைச் சுமந்துதான் மாரியப்பன், ஜிஞ்சாங் தாமான் பெரிங்கின் பி.பி.ஆர் அடுக்குமாடி வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.
கடந்த 2012-ல் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற மாரியப்பன் தீடீர் என்று உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரலில் நீர் கோர்த்துக்கொண்டதால், 2 வாரம் தீவீர சிகிச்சையில் இருந்த மாரியப்பன், அதன் பின் விளையாட்டுத்துறையில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றாலுமே குடும்பத்தை வழிநடத்த சிரமப்பட வேண்டிய இன்றைய பொருளாதாரச் சூழலில், கணவன் மனைவி இருவருமே அங்கவீனர்கள் என்றால், அந்த குடும்பத் தலைவரின் மனநிலை எப்படி இருக்கும் ? அதே சமயத்தில் மூன்று பிள்ளைகளைப் படிக்கவைக்கும் பொறுப்புடைய ஒரு தகப்பனின் நிலை எப்படி இருக்கும்? சமூகநல இலாகா வழங்கும் உதவித் தொகையில்தான் மாரியப்பனின் குடும்பம் வாழ்க்கையைக் கடத்துகிறது.
செயற்கைக் காலைக் கொண்டு நடமாடி கொண்டிருந்த மாரியப்பன், அது பழுதாகியதால் நடக்க முடியாமல் வீல்-சேரில்தான் இருக்கிறார். அந்தச் செயற்கை காலின் விலை 8000 வெள்ளி. ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில், சொந்த வீட்டில் இருந்த மாரியப்பன், சில காரணங்களால் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனையடுத்து கடந்த ஆண்டு கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சாமாட்டை சந்தித்து, தரைவீடு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அவருக்கு தாமான் பெரிங்கின் அடுக்குமாடியில், இரண்டாவது மாடியில் ஒரு வீடு வாடகைக்கு வழங்கப்பட்டது. இன்றுவரை அதற்கு அவர் வாடகை கட்டி வருகிறார்.
ஆனால், அவரும் அவரது மனைவியும் தினம்தோறும் எதிர்நோக்கும் பிரச்னை அங்கு அதிகம். பி.பி.ஆர் கழிவறை இவர்களுக்கு உரியதாக இல்லை. அதை மாற்றி அமைக்க பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் அங்குள்ள பொறுப்பாளர்களிடம் கூறினார். கழிவறையைச் சற்றுப் பெரிதாகக் கட்டினார்கள். ஆனால், அதன் தோற்றத்தை அவர்களுக்கு ஏற்ப மாற்றமுடியாது எனக் கூறிவிட்டனராம். இதனால், தினமும் அவதிப்படுவதாகச் சொல்கிறார்கள் அவர்கள்.
அதோடு அங்குள்ள மின்தூக்கியும் பல முறை பழுதாகிவிடுவதால் பெரும் சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது.
ஒருமுறை பலத்தமழை, பெண் பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து அழைத்துவர வீல் சேரில் கீழே இறங்கி மோட்டார் சைக்கிளை எடுக்கச் சென்ற மாரியப்பன், மின்தூக்கி பழுதடைந்ததால், படியில் நகர்ந்து கீழே இறங்கி, மழையில் நனைந்து சிரமப்பட்டு அந்தச் சிறப்பு மோட்டார் சைக்களில் பிள்ளைகளை எற்றி வந்தாராம். மின் தூக்கி பழுதடையும் போதெல்லாம் அவர் இப்படித்தான் படியில் இறங்குகிறாராம்.
1988 முதல், உலக சக்கர நாற்காலி விளையாட்டு , பாரா ஒலிம்பிக் விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு எனப் பல விளையாட்டில் பங்கு பெற்று, கிட்டத்தட்ட 13 தங்கங்களை நாட்டிற்கு வென்று கொடுத்ததோடு, வெள்ளி - வெண்கலம் எனப் பல பதக்கங்களையும் வென்றுள்ளார். இன்று விதியின் விளையாட்டில் முட்டி மோதிக் கொண்டிருக்கும் இவர், அரசாங்கத்திடம் கேட்பது ஒரு மலிவு தரை வீடு வேண்டும் என்பதுதான். அடுக்குமாடியில் மிகவும் சிரமப்படுவதாகக் கூறும் மாரியப்பன், நாட்டிற்குப் பல பதக்கங்களை வென்று தந்த தனது தற்போதைய நிலையை எண்ணி, வென்றெடுத்த பதக்கங்களை எடுத்துப் பார்த்து வேதனைப்படுகிறாராம் தினமும்.
அண்மையில் இவர் பயன்படுத்தி வந்த சிறப்பு மோட்டார் சைக்கிள் பழுதாகி விட்ட நிலையில், தற்போது மிகவும் சிரமப்படுகிறார். மாரியப்பனின் நிலை தெரிந்த சில நண்பர்கள், அதற்கு முயற்சி எடுத்த வேளையில், ஜொகூர் ‘தளபதி’ நற்பணி மன்றம் முன்வந்து இலவசமாகப் புதிய சிறப்பு மோட்டார் சைக்கிளை மாரியப்பனுக்கு வழங்கியிருக்கின்றனர்.
நம் சமுதாயம் ஒன்றிணைந்து நன்கொடை வழங்கினாலே நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்த வீரருக்கு ஒரு தரை வீட்டைப் பரிசாக அளிக்கலாம். அரசாங்கத்தில் உள்ள நமது தலைவர்கள் மனது வைத்தால், அரசாங்கத்தின் உதவியோடு ஒரு தரை வீட்டை மாரியப்பனுக்கு வழங்கி உதவி செய்யலாம். இந்த இரண்டில் எந்தக் கதவு மாரியப்பனுக்கு திறக்கப்போகிறது? சமுதாயம் நினைத்தால், இந்தச் சமுதாய வீரனின் சிக்கலுக்கு வழி பிறக்கும்!
0 Comments