loader
கார்னிவெல்கள் மீதான குற்றச்சாட்டு அர்த்தமற்றது!   மலேசிய வர்த்தகர்களுக்கே அதிக வாய்ப்பு...  - ஜெகாராவ்

கார்னிவெல்கள் மீதான குற்றச்சாட்டு அர்த்தமற்றது! மலேசிய வர்த்தகர்களுக்கே அதிக வாய்ப்பு... - ஜெகாராவ்

அந்நிய நாட்டு வர்த்தகர்களின் ஆதிக்கம் உள்நாட்டு கார்னிவெல்களில் அதிகரித்து விட்டது எனச் சிலர் குற்றஞ்சாட்டுவது அடிப்படையற்றக் குற்றச்சாட்டு என அஜென்டா சூரியா நிறுவனத்தின் தலைவர் ஜெகாராவ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உண்மையில், அஜென்டா சூரியா ஏற்பாடு செய்யக்கூடிய கார்னிவெல்களில் மலேசியாவைச் சேர்ந்த 'பி 40' வர்த்தகர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மலேசிய நிறுவனங்களான டிவைன் ஹோம், ஈப்போ காச்சாங் பூத்தே, லிபாஸ் ஃபேஷன், அஸ்ப்ரா ஈவெண்ட்ஸ், மயூரா கிரியேஷன், ஜஸால் ஸ்வீட், மோகுல் பஞ்சாப் ஸ்வீட் உள்ளிட்ட பல உள்ளூர் வர்த்தகர்களுக்கு ஆண்டுதோறும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.

பல முன்னணி வர்த்தகர்களுக்கும் அழைப்புக் கொடுத்து வாய்ப்புகளை வழங்கினால்கூட, யாரும் முன் வருவதில்லை. குறைகளை மட்டுமே சொல்கின்றனர்.

பி 40 பிரிவைச் சேர்ந்த வர்த்தகர்கள் வியாபாரம் செய்வதற்குச் சரியான தளம் இல்லாமல் இருக்கின்றனர். ஆனால், அஜெண்டா சூரியா நிறுவனம் குறைந்த விலையில் அவர்களுக்கான தளத்தை உருவாக்கிக் கொடுக்கிறது. இது போன்ற கார்னிவெல்கள்தான் வர்த்தகர்களுக்கு வாய்ப்புகளை ஏற்பாடு செய்து தருகிறது. எனவே கார்னிவெல் நடத்துபவர்கள் மீதான குறைகூறலை,  இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என நேற்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜெகாராவ்  தெரிவித்தார்.
கார்னிவெல்கள் தொடர்பாகப் பல்வேறு புகார்கள் எழுந்ததால், மிட்வேலி பேரங்காடியில் அஜெண்டா சூரியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வந்த வர்த்தக கார்னிவெலில் குடிநுழைவுத் துறை சோதனை நடத்தி, 90 அந்நிய வர்த்தகர்களை விசாரித்து 16 பேரைக் கைது செய்துள்ளனர். இதில் ஏழு பேர் நிபுணத்துவ விஸிட் பாஸ் உடையவர்கள். நால்வர் சோஷியல் பாஸ் உடையவர்கள். மற்ற 5 அந்நியத் தொழிலாளர்கள் யார் என்று தெரியவில்லை.

கார்னிவெல்களில் வர்த்தகம் செய்ய வரும் அந்நிய வியாபாரிகள் நிபுணத்துவ பாஸை பெற்றிருக்க வேண்டும் என்று குடிநுழைவுத் துறை விதிமுறை வகுத்துள்ளது. அந்த முறைப்படிதான் இத்தனை ஆண்டுகள் கார்னிவெல் நடத்தப்பட்டு வருகின்றன.
இது முறையல்ல என்று குடிநுழைவுத் துறையினர் எங்களுக்கு விளக்கம் அளித்தால்தான் எங்களுக்கும் விஷயம் தெரியவரும்.

வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரக்கூடிய பொருட்களுக்கு வரி தள்ளுபடி கிடைக்கிறதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பொருட்களைக் கொண்டு வர முறையான வரி செலுத்தப்படுகிறது. அதற்கான ஆதாரமும் எங்களிடம் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து அதிகமான சுற்றுப்பயணிகளை மலேசியாவிற்குக் கொண்டு வருவதில், கார்னிவெல் பெரும் பங்கு வகிக்கிறது.
ஆனால், இதன் உண்மைத் தன்மை தெரியாமல் வர்த்தகத்தைக் கெடுக்கும் நோக்கில் குற்றஞ்சாட்டுவது முறையானதல்ல.
கடந்த 17 ஆண்டுகளாகச் சிறப்பான முறையில் கார்னிவெல்களை நடத்தி வருகிறது அஜெண்டா சூரியா நிறுவனம். ஆனால், அர்த்தமில்லாமல் எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள். அப்படி அவதூறு பரப்பும் தரப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். 
இது தொடர்பாகக் கடந்த ஜூன் 12-ஆம் தேதி போலீஸ் புகாரும் செய்யப்பட்டுள்ளது என ஜெகாராவ் தெரிவித்தார். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில், குடிநுழைவுத் துறையினரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் ஜெகாராவ் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News