loader
விற்பனைப் பெருவிழா என்ற பெயரில் அட்டகாசம்!  யார் இவர்களைக் கேட்பது?  - டத்தின் மகேஸ்வரி

விற்பனைப் பெருவிழா என்ற பெயரில் அட்டகாசம்! யார் இவர்களைக் கேட்பது? - டத்தின் மகேஸ்வரி

(வெற்றி விக்டர்- சத்யா ஃபிரான்சிஸ்)

கோலாலம்பூர் ஜூன் 7-

நம் நாட்டில் பல விதமான விற்பனைப் பெருவிழா கண்காட்சிகள் நாடு தளுவிய அளவில்  நடைபெறுகிறது. இதில் வியாபாரம் செய்யும் பலர் அந்நிய நாட்டவர்கள்.

இவர்கள் முறையான அனுமதி பெற்றுத்தான் வியாபாரம் செய்கிறார்களா? இதைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் விளக்க முடியுமா? விற்பனை வரிகள் உண்டா?  போன்ற கேள்விகளை மலேசிய ஜவுளி விற்பனை உரிமையாளர் சங்கச் செயலாளார் டத்தின் மகேஸ்வரி எழுப்பியுள்ளார்.

நேற்று மைக்கி அலுவலகத்தில்,  மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் உள்பட, பல உள்நாட்டு வணிக சங்கங்கள் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசுகையில் டத்தின் மகேஸ்வரி இவ்வாறு தெரிவித்தார்.

விற்பனைப் பெருவிழா என்ற பெயரில் அந்நிய நாட்டு வணிகர்கள்,  முறையான அனுமதி பெறாமல் வியாபரம் செய்து அதிக லாபம் அடைந்து நாடு திரும்புகிறார்கள். இந்த அட்டகாசம் ரொம்பக் காலமாக அரங்கேறி வருகிறது.

இதற்கு யார் அனுமதி கொடுத்தது? இவர்கள் எப்படி பொருட்களுடன் வந்து,  இவ்வளவு எளிதாக வருமானம் ஈட்டி நமது நாட்டுப் பணத்தை வெளியே கொண்டு போகிறார்கள்? விற்பனைப் பெருவிழாவில் வியாபாரம் செய்வதற்கு இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? அரசாங்கத்திற்கு இவர்கள் வரி ஏதும் செலுத்துகிறார்களா? போன்ற கேள்விகளை முன் வைத்த டத்தின் மகேஸ்வரி, விற்பனைப் பெருவிழாவில்  சட்ட விரோதமாக வியாபரம் செய்யும் அந்நிய விற்பனையாளர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் கடந்த ஜூன் 4 -ஆம் தேதி போலீஸ் புகார் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்படி ஒரு சட்ட விரோத நடவடிக்கை நடப்பது உள்துறை அமைச்சு மற்றும் நிதி அமைச்சுக்குத் தெரியுமா?  எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டிற்கு இவர்களால்  பேரிழப்பு எற்படுகிறது என்பதை அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் தாம் போலீஸ் புகார் செய்ததாக டத்தின் மகேஸ்வரி தெரிவித்தார்.

 

சட்ட விரோத அந்நிய விற்பனையாளர்களால்  உள்நாட்டு வணிகர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நம் நாட்டினர் இங்கு வியாபாரம் செய்ய வேண்டும் என்றால், நிறுவனப் பதிவு இலாகாவில்  பதிவு செய்து, மாநகர மன்றத்திடம் அனுமதி பெற்று, அதன் பின் வியாபரம் செய்யவேண்டும். ஆனால் அந்நியர்கள் விவகாரத்தில் அப்படி இல்லை. அவர்கள் வருகிறார்கள், கூடாரத்தில் வியாபரம் செய்கிறார்கள், பாக்கெட்டை நிரப்பி விட்டுச் சந்தோசமாகச் சொந்த நாடு திரும்புகிறார்கள். இதைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையா?  என டத்தின் மகேஸ்வரி தெரிவித்தார்.

 

 

இந்த விவகாரத்தில் அரசாங்கம் சற்றுக் கடுமையாக இருந்து, இப்படிப்பட்ட விற்பனைப் பெருவிழாவில் அதிரடிச் சோதனை நடத்தி, சட்டவிரோதமாக விற்பனை செய்யும் அந்நிய நாட்டு விற்பனையாளர் மீதும், அவர்களுக்கு அனுமதி வழங்கும் சில நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் முறையான அனுமதி இல்லாமல் யாரும் வர

மாட்டார்கள்; நிகழ்ச்சி நடத்துபவர்களும் முறையாக நடந்துகொள்வார்கள் என மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். அதோடு இப்படிப்பட்ட விற்பனைப் பெருவிழாவில் உள்நாட்டு விற்பனையாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் டத்தோ கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்!

0 Comments

leave a reply

Recent News