loader
மாற்றுத் தொழிலாளர் விவகாரத்திற்குத் தீர்வு...  மகிழ்ச்சியில் வணிகர்கள்!

மாற்றுத் தொழிலாளர் விவகாரத்திற்குத் தீர்வு... மகிழ்ச்சியில் வணிகர்கள்!

(வெற்றி விக்டர்)

 

கோலாலம்பூர் ஜூன் 1-

அந்நிய தொழிலாளர்களுக்கான தடை முழுமையாக நீங்க வேண்டும் என்று  இந்திய பாரம்பரிய தொழில்துறை சங்கங்கள் அண்மைய காலமாகப் போராடி வந்தனர்.

 

இந்திய பாரம்பரிய தொழில்துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்கும் நடவடிக்கையை, அரசு முழுமையாக முடக்கியதைத் தொடர்ந்து வியாபாரிகள் திக்கு முக்காடினர். பலர் தங்களது தொழிலை விட்டே ஒதுங்கிப் போகும் சூழல் எற்பட்டது.

 

இதனையடுத்து இவ்விவகாரத்திற்குத் தீர்வு கிடைக்கும் நோக்கில், மைக்கி உட்பட தொழில் துறைச் சங்கங்கள் பிரதமர் இலாகா, உள்துறை அமைச்சு, மனிதவள அமைச்சு என, மேலும் சில அமைச்சுகளுக்குச் சென்று மனுக்களை வழங்கினர்.

அதே சமயம், ஊடகங்கள் வாயிலாகத் தங்களின் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.

இதன் பலனாக  மாற்றுத் தொழிலாளர்களுக்கான தடையை மத்திய அரசு முழுமையாக நீக்கியுள்ளது.

இதற்கான அறிவிப்பை மனிதவள அமைச்சர்  குலசேகரன் ஓர் அறிக்கையின் வழி அறிவித்துள்ளார்.

இதன் வழி, அந்நிய  தொழிலாளர் ஒருவர், தமது சொந்த ஊருக்குத் திரும்பினால், அவருக்கு மாற்றாக இன்னொருவரை  வியாபாரிகள் வேலைக்கு அமர்த்தும் பழைய அனுமதி மீண்டும் தடையின்றி செயல்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் வியாபாரத்தை நடத்த முடியாமல் திணறிக்கொண்டிருந்த வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

இத்தடையை அரசு நீக்கியதால்,  இந்திய பாரம்பரிய தொழில் துறையில் ஈடுபட்டு வருபவர்களின் சுமை சற்றுக் குறைந்துள்ளது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், குறிப்பாக மனிதவள அமைச்சர் குலசேகரனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும்  மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன், இந்திய வியாபார சங்கங்களின் தலைவர்களான டத்தோ ரசூல் அப்துல் ரசாக், ஹாஜி அயூப் கான், முத்துசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

 

எனினும், 7 அல்லது 8 தொழில்துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்களைக் கொண்டு வரும் நடவடிக்கையை அரசு  இன்னும் முடக்கி வைத்துள்ளது.

இந்தத் தடையும் முழுமையாக நீங்கினால் மட்டுமே இவ்விவகாரத்திற்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என்று மைக்கியின் தேசியத் தலைவர் டத்தொ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

ஒரு வியாபாரத்திற்குத் தொழிலாளர் தேவை என்றால், அதன் உரிமையாளர் நேரடியாக விண்ணப்பம் செய்யும் நடைமுறையை அரசு அமலுக்குக் கொண்டு வரவேண்டும். இவ்விவகாரத்தில் இனி இடைத்தரகர்கள் இருக்கக்கூடாது.

அப்போதுதான் அந்நிய தொழிலாளர்கள் விவகாரத்தில் குளறுபடிகள் ஏற்படாது.

இந்த நடைமுறையை அரசு உடனடியாக அமலுக்குக் கொண்டு வந்தால், வருங்காலங்களில் அந்நிய தொழிலாளர்கள் விவகாரத்தில் எந்த ஒரு சர்ச்சையும் ஏற்படாது.

 

அதே வேளை, மைக்கி திட்டமிட்டபடி, வரும் ஜூன் 11-ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸில் இந்திய பாரம்பரிய தொழில்துறையில் ஈடுபட்டும் வருபவர்களுடன் நேரடியாகச் சந்தித்து பேசவுள்ளோம்.

அங்குத் தொகுக்கப்படும் விஷயங்கள் ஒரு மகஜராக நான்கு முக்கிய அமைச்சுகளிடம் வழங்கப்படும். மேலும், அனைத்து தொழில் துறைகளுக்கான தடைகள் நீக்கப்படும் வரை மைக்கி நடவடிக்கைகள் தொடரும் என டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

கடந்த ஆட்சியில் உள்துறை அமைச்சர்  தனது சுயநலத்திற்காக அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்கும் நடவடிக்கையை முடக்கினார். இப்போது 'கந்தியான்' எனப்படும் மாற்று தொழிலாளர்களுக்கான முடக்கம் நீக்கப்படுவதாக இந்த ரமலான் மாதத்தில் ஓர் இனிப்பான செய்தியை மனிதவள அமைச்சர் வழங்கியுள்ளார்.

எஞ்சியுள்ள துறைகளுக்கான தடைகள் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என, 'பிரிஸ்மா' தலைவர் ஹாஜி ஆயூப் கான் தெரிவித்தார்!

விளம்பரம்:

0 Comments

leave a reply

Recent News