loader
இந்திய வர்த்தகச் சமுதாயத்தைக் காக்க   மைக்கி தலைமையில் மாபெரும் கூட்டம்!

இந்திய வர்த்தகச் சமுதாயத்தைக் காக்க மைக்கி தலைமையில் மாபெரும் கூட்டம்!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் மே 28-

இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கி வரும் அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை, அதனால் அவர்களுக்கு எற்பட்டுள்ள நஷ்டம், தொடர்ந்து அவர்களைச் சூழ்ந்து வரும் இழப்புகள் போன்றவற்றால், இந்திய பாரம்பரியத் துறை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக விவாதித்து, நான்கு முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில், மைக்கி மற்றும் 20 இந்திய வர்த்தகச் சங்கங்கள் ஒருங்கிணைந்து  மகஜர் வழங்க உள்ளதாக, மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று (திங்கட்கிழமை) மைக்கி தலைமையகத்தில் இந்திய வர்த்தகச் சங்கங்களுடன் மைக்கி சிறப்பு கலந்துரையாடல் சந்திப்பை நடத்தியது.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய  டத்தோ கோபாலகிருஷ்ணன், மைக்கியின் சார்பில் பல வகையில், பல அமைச்சுகளுடன் பல கலந்துரையாடல் நடத்தியும் இன்னும் எந்த ஒரு சாதகமான பதிலும் அரசாங்கத் தரப்பிடம் இருந்து வரவில்லை என்று தெரிவித்தார். இதனால், கத்திமேல் நடப்பது போல் வியாபாரத்தை நடத்தி வருவதாகவும்,  பல வணிகர்கள் தங்கள் வியாபாரத்தை நிறுத்தி வைத்துக் கடைகளை மூடிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வியாபாரத்தைத் தொடங்கினாலும், மூடிவிட்டாலும் பணம் இழப்பு ஏற்படும். அதேபோல் திரும்பத் திறந்தாலும் பணம் செலவாகும்.

இந்திய வர்த்தகத் துறையைப் பொறுத்தவரை, அந்நிய தொழிலாளர்களை  விரைவில் தருவிப்போம் என்று ஆசை காட்டி, பிறகு ஆய்வு செய்கிறோம் என்று சொன்னார்கள். அதன் பின் உள்நாட்டவர்களைப்  பயன்படுத்துங்கள் என்றார்கள். அதன் பின் மீண்டும் ஆய்வு செய்வதாகச் சொல்லி, இப்போது நாட்டில் அந்நிய தொழிலாளர்கள் அதிகமாக உள்ளதாக முன்னுக்குப் பின் முரணாகச் சொல்கிறார்கள்.

இப்படியே நிலையில்லாமல் சொல்லிக்கொண்டே போனால், எத்தனை முறைதான் தற்காலிகமாக மூடி முடித் திறப்பது?  எவ்வளவு நாள்கள்தான் வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு வாடகை கட்டிக்கொண்டு காத்திருப்பது?

இந்த நாட்டில் 3 மில்லியன் அந்நிய நாட்டவர்கள் முறையாகவும், 2 மில்லியன் அந்நிய தொழிலாளர்கள் சட்டவிரோதமாகவும் உள்ளனர். ஆக மொத்தம் 5 மில்லியன் அந்நிய தொழிலாளர்கள் உள்ள நிலையில்,  இந்திய வியாபாரிகளின் தொழில்துறைக்கு 50 ஆயிரம் அந்நிய தொழிலாளர்களைத்தான் தருவிக்கச் சொல்லிக் கேட்கிறோம். அது மொத்தமுள்ள அந்நிய தொழிலாளர்களில் 1 விழுக்காடுதான்.

இதை முறையாக அரசாங்கத்திற்கு எடுத்துரைக்க, வருகிற ஜூன் 11-ஆம் தேதி, பிரிக்பீல்ட்ஸ் கந்தய்யா மண்டபத்தில்,  மாபெரும் கூட்டத்தை எற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் 4 முக்கிய அமைச்சர்களிடமும் எங்கள் நிலைமையை எடுத்துரைத்து, பிரதமர் துறை, மனிதவள அமைச்சு, உள்துறை அமைச்சு, உள்நாட்டு வணிகம் மற்றும் பயனீட்டாளர் மேம்பாட்டு விவகார அமைச்சுகளுடன் மகஜர் வழங்க உள்ளதாக, டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

இந்திய வர்த்தகச் சமுதாயத்தைக் காக்கவும், இந்திய பாரம்பரிய வர்த்தகத் துறையை அழியவிடாமல் காப்பாற்றவும் அனைத்து இந்திய வர்த்தகர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என டத்தோ கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

 

பிரதமர் எங்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. எங்கள் பிரச்னையை பிரதமர் பார்வைக்குக் கொண்டுசெல்லவே இந்த க்கூட்டம் என்றும் அவர் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News