loader
மிக்கா விருதுகளில் அரசியல்  தலையீடா?

மிக்கா விருதுகளில் அரசியல் தலையீடா?

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் மே- 25

நம் நாட்டின் தமிழ் சினிமா வெளி என்பது மிக மிகக் குறுகியது. அதிலும் கலைஞர்களைப் பொறுத்தவரை மீண்டும் மீண்டும் ஒரே முகங்கள்தான் திரையில் மின்னுகிறார்கள். 
மலேசியத் தமிழ் சினிமாவிற்கான வரவேற்பும் நம் மக்களிடையே குறைவாகத்தான் உள்ளது. நம் நாட்டுச் சிறந்த படங்கள் கூட தோல்வியைத் தழுவும் அவலமும், தமிழ் நாட்டு மொக்கை படங்கள் கூட லாபம் பார்க்கும் வேடிக்கையும் இங்கேதான் நிகழ்கிறது.
இந்நிலையில் நம்ம கலைஞர்களையாவது அங்கீகரித்து, விருதுகள் மூலம் அவர்கள் திறமையை அடையாளம் காட்டுவோம் என்கிற நோக்கில்தான் மிக்கா விருது தொடங்கப்பட்டது.

இதற்கு முன் இப்படி ஒரு விருது நம் கலைஞர்களுக்கு வழங்கப்படவில்லை. பல வருடங்களாக, பல ஏக்கங்களுடன் இருந்த கலைஞர்களுக்கு இப்படி ஒரு விருது கையில் கிடைப்பது, ஈன்றேடுத்த பிள்ளையை முதன்முதலாகக் கையில் தாங்கும் சந்தோஷத்திற்குச் சமம்.

இங்கு ஏக்கத்தோடு காத்திருக்கும் கலைஞர்களுக்கு இவ்விருதுகள் ஒரு வழியையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இருந்தபோதும், இந்த விருதுகள் வழங்குவது குறித்து சலசலப்புக்கும் நம்மிடையே பஞ்சமில்லை. வேண்டியவர்களுக்கு மட்டுமே விருது வழங்குகிறார்கள் என்கிற கசப்பும் இங்கே உண்டு.
அவ்வகையில் இவ்வாண்டும் மிக்கா 2019 விருது விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது அண்மையில்.

இருந்தபோதும், மிக்கா விருதுக்குத் தகுதியானவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?
மிக்கா விருதிற்கான நீதிபதிகள் யார்? போன்ற  கேள்விகள் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, வருங்காலங்களில் விருதுகளுக்கான திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கு முன், அதன் நீதிபதிகளை வெளிப்படையாக அறிவிப்பதே இதற்குச் சரியான தீர்வாக இருக்கும்.

திரைக்கு வந்த படங்கள் - கலைஞர்களை  எந்தச் சாராம்சத்தில் நீதிபதிகள்  விருது பட்டியலுக்குத் தேர்வு செய்துள்ளனர் எனபதையும் ரசிகர்களுக்கு விளக்குங்கள் .

நீதிபதி மற்றும் மக்கள் வாக்கெடுப்பில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுங்கள். 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு'. அது திரைப்படமோ தொலைக்காட்சி டெலி மூவியோ எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். நடுவர் - மக்கள் ஆகியோரின் தேர்வில் விருது வழங்கப்படவேண்டும்.

காரணம், விருது வழங்குவதில் அரசியல் நடப்பதாகச் சொல்கிறார்கள். வரும் காலங்களில் ஏற்பாட்டுக் குழுவினர் இந்தப் பொறுப்பை நீதிபதி மற்றும் ரசிகர்களிடம் வெளிப்படையாகவே விட்டு விடுங்கள்.

அதோடு, நீதிபதிகள் அலசி  ஆராய்வதற்கு முன், உதாரணத்திற்கு 2019  முதல் அடுத்த விருது அறிவிப்பு வரை வந்த அனைத்து திரைப்படங்கள், டெலிமுவீகளைப்  பட்டியல் இட்டு, மக்கள் மன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துங்கள்.
மக்கள் தேர்ந்தெடுத்த சிறந்த 10 வரிசையில் உள்ள திரைப்படங்களையும், டெலிமூவீகளையும் விருதின் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, நீதிபதிகள் தங்கள் ஆய்வுப் பணிகளைத் தொடங்கலாம்.
உள்ளே நுழைந்த சிறந்த பத்து படைப்பை ஆய்வு செய்வதன் மூலம், விருது தேர்வுக்குரிய படைப்புகளையும் இதன் மூலம் கண்டறியலாம்.

இப்படி எல்லாப்
பிரிவுகளும் மக்கள் மற்றும் நீதிபதிகளின் வெளிப்படையான தலையீட்டில் இருந்தால், யாரும் குறைசொல்ல முடியாது. அடுத்த முறை மக்களைக் கவர்வதற்கான முயற்சிகளை கலைஞர்கள் தங்களின் படைப்பின் வழி எடுப்பதற்கும் இது வழியாக அமையும்.

இம்முறை விருது பெற்றவர்களில், தகுதியானவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு  வாழ்த்துகள். அதேபோல் விருது பெறத் தகுதியான பல படைப்பாளிகள் புறக்கணிக்கப்பட்டும் உள்ளனர்.
முடிந்ததைப் பற்றிப் பேசி எந்தப் பயனும் இல்லை. ஆனால் இனி நடக்கும் அனைத்தும், வெளிப்படையாக எந்த ஒளிவு மறைவும் இல்லாமல், அரசியல் தலையீடு இல்லாமல் நடக்கவேண்டும்.

அரசியல் தலையீடு எல்லாம் இல்லை என்று சிலர் கொந்தளிப்பார்கள். அதற்கான நியாயம் கற்பிப்பார்கள்.
உண்மையில் அரசியல் நடந்ததா? இல்லையா? என்பது அவர்கள் மனசாட்சிக்கு மட்டும்தான் தெரியும்.
உங்களின் சிறந்த முயற்சிக்குப் பாராட்டுகள். அதே நேரத்தில் விருதுகளின் தரமும், விருது வழங்கும் நீங்களும் சத்தியத்தின் பக்கம் நின்று விருதுகளைக் கௌரவியுங்கள்.
மிக்கா விருது என்றால் அது தரமான விருது என்று அனைவரும் சொல்லட்டும்!

0 Comments

leave a reply

Recent News