loader
ஏழ்மையான இந்தியக் குடும்பங்களுக்கு  உதவ, கே.கே.பி புதிய திட்டம்!

ஏழ்மையான இந்தியக் குடும்பங்களுக்கு உதவ, கே.கே.பி புதிய திட்டம்!

கோலாலம்பூர் மே 21-

தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கத்தின் 39-வது  ஆண்டு  பேராளர் மாநாடு, எதிர்வரும் மே 26-ஆம் தேதி முத்தியாரா வணிக வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

சுமார் 450-க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில், பி20 பிரிவு மக்களுக்கு  உதவும் நோக்கில் வியாபார மேம்பாட்டுச் சேவை மையம் அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. ஏழ்மையில் வாழும் இந்தியக் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் இத்தீர்மானம் நிறைவேற்றப்படும் என தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கத்தின்  தலைவர் டாக்டர் ஆறுமுகம் சாமிநாதன் தெரிவித்தார்.

ஏழ்மையில் வாழும் தனித்து வாழும் தாய்மார்கள், மிக ஏழ்மையில் உள்ள குடும்பங்களை கே.கே.பி-யின் அங்கத்தினராகச் சேர்த்து, இந்த மையத்தின் வயிலாக அவர்கள் சிறு தொழில் செய்வதற்கு மிகக் குறைந்த  வட்டியில் கடன் உதவி வழங்கவிருப்பதாகவும் டாக்டர் ஆறுமுகம் தெரிவித்தார்.

இத்திட்டம் தொடர்பாக நிர்வாகக் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டு, இம்மாநாட்டில் போராளர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.

இத்தகைய திட்டத்தின் வழி, வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, சேமிப்புப் பழக்கத்தையும் உருவாக்க முடியும்.

கே.கே.பி-யின் பங்குதாரர்களுக்கு இம்முறை 5 சதவிகிதத்திற்கும் மேலாக ஈவுத்தொகை  வழங்கப்படவிருப்பதாகவும், அதன் விவரங்கள் மாநாட்டில் தெரிவிக்கப்படும் எனவும் டாக்டர் ஆறுமுகம்  கூறினார்.

அதோடு பேராளர்கள் இணைந்து,  3 ஆண்டுகளுக்கு ஒரு மாணவரைத் தத்தெடுத்து, அம்மாணவர்கள் பட்டதாரி ஆவதற்கான முழு செலவீனங்களையும் ஏற்றுக்கொள்ளும் தீர்மானமும் முன்னெடுக்கப்படவிருக்கிறது.

ஏழ்மையான  குடும்பச் சூழலில் உள்ள மாணவர்கள் அல்லது  படிப்பறிவு இல்லாத பெற்றோர்களின் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கி, மேற்கல்வி படிக்க வசதி இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கே.கே.பி சிறந்த அடைவுநிலையைப் பெற்று, வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் அதே வேளையில், சமுதாய அக்கறையுடன் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

முன்பு 5 ஆயிரம் வெள்ளி வரை கடன் உதவிகளை வழங்கிய கே.கே.பி, இப்போது 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வெள்ளி வரை சாதாரண கடனையும், 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வெள்ளி வரை வியாபாரக் கடனையும் வழங்கி வருகிறது.
இது வரை 270 மில்லியன் கடன் உதவிகளை
கே.கே.பி வழங்கியுள்ளது. இது இந்தக் கூட்டுறவுக் கழகம் வளர்ச்சி அடைந்து வருவதைக் காட்டுகிறது. அதோடு இவ்வாண்டு 6 மாடி கொண்ட இரண்டு கட்டடங்களையும் கே.கே.பி சொத்துடைமையாக்கியது இன்னொரு சாதனை என்றார், டாக்டர் ஆறுமுகம் சாமிநாதன்.

சேமிக்கும் பழக்கமே சமுதாயத்தை உயர்த்தும். நீங்களும் கே.கே.பி-யில் இணைந்து சேமிப்பைத் தொடங்க நினைத்தால், கீழ்க்காணும் எண்களில் அழைக்கலாம் அல்லது மின்னஞ்சல் வழி தொடர்புகொள்ளலாம்!

03-92129633
மின்னஞ்சல்: kkpberhad80@gmail.com

0 Comments

leave a reply

Recent News